சீனுவும் சிறுத்தையும் -1
அதிகாலை பொழுது. சேவல் கூட படுத்து உறங்கும் வேளையில் சீனுவிற்கு மட்டும் உறக்கம் பறந்தோடியது. அவனது நாய் கூட வீட்டின் மூலையில் நெருப்புக் கங்குகள் இன் வெப்பத்தில் குளிர் காய்ந்த வண்ணம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது.
சீனு போர்வையை விலக்கி சுவற்றை நோக்கினான்.அவன் வீட்டுச் சுவற்றில் மரியாதைக்குரிய பொருளாக ஒரு பழைய கடிகாரம் தொங்கிக்கொண்டிருந்தது.அதில் மணி 5 என காட்டியது.சீனு விற்கு இன்னும் அரை மணி நேரமே இருந்தது.அதற்குள் அவன் குளித்து கிளம்பவேண்டும்.
நெட்டி முறித்து அவன் எழுந்து சென்று கதவைத் திறக்கையில் அவனது நாய் சிப்பிப்பறையும் அவனுடன் சென்றது.வைகாசி மாதத்தில் அங்கு குளிர் குறைவுதான்.அவன் இருப்பது மலைப்பிரதேசம் ஆதலால் அதிகாலையில் பணியின் சுவடை என்றும் உணரலாம்.
இன்னும் அவனை பார்த்து சிரித்த பனிப்பூவைப் பார்த்தவண்ணம் அவன் ஓடையை அடைந்தான். என்றும் சலசலக்கும் ஓடையின் சத்தம் அவனுக்கு சிறுவயதிலிருந்தே பழக்கமான ஒன்று.மலையை விட்டு செல்லும் போது அந்த சத்தம் வரவில்லை என்றால் தான் அவனுக்கு கவலையாக இருக்கும்.
சில்லென்ற தண்ணீரைப் பார்த்ததுமே அவனது உடல் சிலிர்த்தது.அதிக நேரம் எடுக்காமல் ஓடையில் இறங்கி குளித்துவிட்டு வந்தான்.சிப்பிப்பறை மட்டும் பாரில் அமர்ந்து அவன் குளிப்பதை பார்த்து விட்டு வீட்டிற்கு செல்ல தயாரானது.
புத்துணர்ச்சி மேலோங்க வீட்டை அடைந்தான் சீனு.அவன் அம்மா எழுந்து அவனுக்கு காலை உணவாக ரொட்டியும் டீயும் செய்துகொண்டிருந்தாள் அக்கா பூஜா இன்னும் எழுதவில்லை.பூஜா அவனைப் போல் பள்ளி செல்லவில்லை .பகலில் அம்மாவிற்கு வீட்டிலும் கழனியிலும் உதவி செய்து வந்தாள் சீனுவின் அப்பா தவறிவிட்டார் .எனவே சீனு தன்னையே குடும்பத் தலைவனாக பாவித்தான்.
காலை உணவை உண்டு அதையே மதியத்துக்கும் எடுத்துக்கொண்டு பிள்ளையாரின் முன்னால் ஆஜரானான் சீனு.எதையும் நல்ல முறையில் தொடங்க அவர் அருள் வேண்டும் அல்லவா.....சீனுவின் பயணம் தொடங்கும் முன் அவன் பிள்ளையாரே வழித் துணையாக வர வேண்டும் என்று மனதார பிரார்த்தித்து விட்டு ஆரம்பிப்பான். ஆம்.. ஐந்து மைல் தூரத்தில் இருக்கும் தன் பள்ளியை நோக்கிய பயணம் அது.
பிள்ளையாருக்கு யானைத்தலை வந்த கதை தெரியுமோ ...சீனுவின் தாய் அவனுக்கு அடிக்கடி சொல்வதுண்டு. பிறக்கும்போது கணேசனும் அழகு குழந்தையாகத்தான் பிறந்தான். அவனது அழகைக் கண்டு வியந்த பார்வதி அவனை சனீஸ்வரரிடம் காட்டப்போய் - சனி தன் கண்களால் குழந்தையின் தலையை எரித்து விட்டாராம் .இதனை பார்வதி பிரம்மாவிடம் முறையிட்ட போது அவரிடம் கணபதிக்கு சூட்ட எந்தத் தலையும் இல்லை. எனவே தன் பணியாளரிடம் பூலோகம் சென்று எந்த உயிரினம் தவறான நடவடிக்கையில் ஈடுபடும் போது உன் கண்களில் படுகின்றதோ -அதன் தலையை கொண்டு வா என்று பணித்தாராம். அவனது சீடனும் பூலோகம் சென்று பார்த்த போது -தவறான திசையில் தலை வைத்து தூங்கும் யானையின் தலையைக் கொய்து வந்து கணேசனுக்கு சூட்டினான்.
சீனு விற்கு எத்தனை முறை இக்கதையைக் கேட்டாலும் அலுக்காது.தனது சீருடையை அணிந்து பயணத்திற்கு தயாரானான் சீனு .
பூஜா அப்போதுதான் உறக்கம் கலைந்து எழுந்தாள் .தன் முடியை சரிசெய்த வண்ணம் சீனுவை நோக்கி புன்னகைத்தாள்.'நான் சொன்னதை நீ ஞாபகம் வச்சிருக்க தானே '-என்றாள். 'ஞாபகமா' என்று ஒரு முறை யோசித்து விட்டு ,'வரும்போது ஏதாச்சும் வாங்கிட்டு வரணுமா '- என்று தெரியாதவன் போல் நடித்தான்.
'நடிக்காத!!!! வரும்போது எனக்கு வளையல் வாங்கிட்டு வரேன்னு சொல்லி இருக்க. போன தடவை மாதிரி என்னை ஏமாத்த கூடாது 'என்றாள் பூஜா பொய்க்கோபம் காட்டி.
'இந்த பொண்ணுங்களுக்கு எப்பவுமே இதே நினைப்புதான்..சரி சரி.. சிவப்புக்கலர் தானே' என்றான் அதிகாரத் தொனியாக.
'ஆமா மறக்காம வாங்கிட்டு வாடா !உனக்கு பிடிச்சது எல்லாம் இரவு உணவுக்கு செஞ்சு வைக்கிறேன்'.. 'சரிதானே அம்மா.!!'
'சரி! இப்போ எழுந்து கிளம்பு. வயலுக்கு போய் சீக்கிரமா உழணும் .மழை இந்த வருடம் சீக்கிரம் வரும் போல இருக்கு. கடவுளுக்கு நம்ம மேல கொஞ்சம் கருணை இருக்கு.' என்றாள் அம்மா.
'பருவ மழை கொஞ்சம் காலம் தாழ்த்தி தான் வருது .எங்க ஆறுமுகம் சார் நேத்துதான் சொன்னாரு.அதுக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லையாம் 'என்றான் சீனு தன் தோள் பையை சரிசெய்தபடி.
அடுத்து வரும் சண்டையைத் தவிர்க்க பூஜை 'உனக்கு நேரம் ஆச்சு இல்ல !கிளம்பு 'என்றாள்.
சீனு அம்மாவிடமும் தங்கையிடமும் விடைபெற்று வெளியேறினான். அருகிலிருந்த மலை ஏறத் தொடங்கினான்.சிப்பி என்ற சிப்பிப்பறையும் அவனுடன் பள்ளிக்கு செல்ல தயாரானது.
ஐந்து மையில் தூரம்.. ஒவ்வொரு நாளும் சீனு அதிகாலையிலேயே 5 மைல் தூரம் பயணித்து அவனது பள்ளி இருக்கும் கெம்டியை அடைவான். அது உத்தரபிரதேசத்தில் உள்ள சிறு நகரம். நிறைய பிள்ளைகள் அருகில் இருக்கும் ஊர்களில் இருந்து வந்தாலும் சீனுவின் அளவிற்கு யாரும் பயணம் செய்ய தேவையில்லை. அவனது ஊர் தான் மலையடிவாரத்தில் கடைசி ஊராக இருந்தது .பாதைகளும் முட்கள் நிறைந்த காட்டுப் பாதைகள் மட்டுமே.
கெம்டியில் சிறு பள்ளி, மருத்துவமனை,தபால் நிலையம் மற்றும் பல கடைகள் இருந்தன. சீனுவின் ஊரான மஞ்சரியில் இவ்வாறு எந்த வசதியும் கிடையாது. மஞ்சரியில் ஒருவருக்கு உடம்பு முடியவில்லை என்றால் ஒன்று வீட்டிலேயே உடல் சரியாகும் வரை இருக்க வேண்டும் அல்லது நடந்து சென்று கெம்டியில் சிகிச்சை பெற வேண்டும்.
வாரத்தில் இரண்டு நாட்கள் தபால்காரர் வந்து அவ்வூரில் உள்ளோருக்கு தபால்கள் தந்து விட்டு செல்வார்.மஞ்சரியிலிருந்து கெம்டி செல்ல இயலாமல் படிப்பைப் பாதியில் விட்டவர் பலர்.சீனு மட்டும் விடா முயற்சியுடன் பள்ளி சென்று வருகிறான்.படிப்பை நிறுத்திவிட்டு கழனி வேலை செய்தாலும் அவனை யாரும் திட்டு வாரில்லை .ஊரில் பலர் அதையே கையாண்டு வருகின்றனர்.
ஆனால் சீனு அவன் விருப்பத்தின் பொருட்டே பள்ளி செல்கிறான்.அவனைத் தடுக்க அந்த மலைகளாலும் முடியவில்லை. பாவம்!!!.தான் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் சீனுவின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.
இவ்வுலகத்தின் தொடக்கமே அம்மலையின் அப்பால் உள்ளதாக அவன் எண்ணினான் .வெளியுலகத் தொடர்புகளை அம்மலை தடுப்பதாக அவன் எண்ணினான். எனவே மலையின்மேல் ஏறி வெளியுலகத்தை பார்ப்பதில் அவன் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான் .விரிந்து கிடந்த இந்த அண்டம் தன் காலடியில் இருப்பது போல உணர்ந்தான்.
சூரியன் உதிக்கும் முன் மலை ஏறி அந்த அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டான் .காடு அவனை வா என்று அழைப்பது போல தோன்றியது .அது பல மிருக இனங்களை உள்ளடக்கிய பசுமையான காடு.
லங்கூர் என்ற வகை குரங்குகள் அங்கு ஏராளமாக இருந்தன .அவை மலை அடிவாரத்தில் வாழும் மற்ற குரங்குகளை போல மனிதர்களையோ குழந்தைகளையோ தொல்லை செய்வதில்லை .அவைகளுக்குத் தேவையான உணவை காட்டு மரங்கள் தாராளமாய் தந்தன. எனவே அவை பெரும்பாலும் மரங்களை விட்டு கீழே இறங்குவதில்லை. சிறு குரங்குகள் மட்டும் கீழே விளையாடிக் கொண்டிருக்கும்.
சீனுவின் வருகை அவைகளுக்கு பழகிய ஒன்றே!! .அதனால் அவை அவனைக் கண்டு கொள்வதில்லை .பெரிய குரங்குகள் மட்டும் அவனை கேள்விக்குறியாய் பார்க்கும்.
சீனு அங்குள்ள சிறு அருவியில் தண்ணீர் குடிக்க இறங்கினான் .அந்த அருவி சிறு ஆறாக மாறி மலையின் இன்னொரு பக்கம் சென்று மஞ்சரியின் ஆற்றோடு கலந்தது. அவ்வருவியின் அருகில் வேறொரு பாதையும் காணமுடியும்.
அந்தப் பாதை வேறு ஒரு கிராமத்தை காட்டோடு இணைக்கும் பாதை. அப்பாதையில் சாருவின் வரவை சீனுவால் பார்க்க முடிந்தது.
சாரு சீனுவை விட வயதில் பெரியவன் ஆனாலும் மிகவும் மெலிந்து காணப்பட்டான் . இப் பாதையிலிருந்து சாரும் சீனுவும் சேர்ந்தே கெம்டி செல்வார்கள்.
சாரு பால் பாத்திரங்களை சுமந்துகொண்டு வந்துகொண்டிருந்தான் .அவன் கெம்டியில் சீனுவின் பள்ளிக்கு அருகில் உள்ளோருக்கும் அங்குள்ள மருத்துவருக்கும் பால் வினியோகம் செய்து வந்தான்.
'எங்க ஊருக்குள்ள நேத்தி சிறுத்தை வந்துடுச்சு 'என்று கூறிக்கொண்டே வந்தான். இது சீனுவை எவ்வகையிலும் ஆச்சரியப்படுத்தவில்லை.சிறுத்தை ஊருக்குள் வருவது அங்கு சகஜம்.பனி காலத்தில் மட்டுமே சிறிது பயம் இருக்கும். அக்காலத்தில் அதற்கு சரியான உணவு கிடைக்காமல் மாடு ஆடுகளை தாக்க ஆரம்பித்துவிடும்.
'எத்தனை மிருகங்களை தூக்கிட்டு போச்சு.'என்று கேட்டான் சீனு. 'அது தூக்குறதுக்கு முன்னாடி அங்கிருந்த நாய்கள் போட்ட சத்தத்தில் நாங்க எல்லாம் சேர்ந்து அதை விரட்டிட்டோம்' என்றான் சாரு.
'போன வருஷம் எங்கு ஊருக்கு வந்த சிறுத்தை தான் இருக்கும் .எங்களோட ஒரு கண்ணு குட்டியையும் இரண்டு நாயையும் அது தூக்கிட்டு போயிடுச்சு'.
'அந்த அதிகாரிகள் சுட்ட சிறுத்தை தானே அது எங்க ஆடு மேல கை வைக்காத வரைக்கும் நல்லது. அதோட கால்ல ஒரு தோட்டா இருக்கும் .அந்த வேட்டைக்காரங்க எங்களுக்குச் சுடத் தெரியும் ௭ன்று காமிக்க சிறுத்தையை வேட்டை ஆடப் போறாங்க அது அவங்க குறி தப்பினால் கூட பரவாயில்லை அதை காயப் படுத்தாமல் இருந்தால் தேவலை .அதுக்கு அப்புறம் அது மானை துரத்தி பிடிக்க முடியாமல் கிராமத்துக்குள் வந்துடுது.' என்றான் சாரு.
'நல்ல வேளை அது மனுஷங்களை வேட்டையாடுவதில்லை .ஆறு வருஷத்துக்கு முன்னாடி இருந்த சிறுத்தை எப்படி மனுஷங்களை வேட்டையாடும் என்று எங்கப்பா சொல்லுவாங்க..அது எப்படி செத்தது என்று தெரியுமா...'.என்று கேட்டான் சீனு.
கருத்துகள்
கருத்துரையிடுக