சீனுவும் சிறுத்தையும் -2

'ஓ தெரியுமே...பக்கத்து ஊர் தலைவரோட தலையை அது சாப்பிட்டுருச்சாம்.  தனக்குத்தானே விஷம் வெச்சிட்டு செத்துடுச்சு 'என்றான் சாரு...இதைக் கேட்டதும் சீனுவிற்கு சிரிப்புதான் வந்தது ..அந்த ஊர்த் தலைவரை யாருக்கும் பிடிப்பதில்லை...


அவர்கள் மேலும் பேசாமல் கெம்டியை நோக்கி விரைந்து சென்றனர்.அப்போது அவர்களை நோக்கி தபால் மணி வந்து கொண்டிருந்தார்.

'எங்களுக்கு ஏதாச்சும் கடுதாசி வந்து இருக்கா' என்று கேட்டான் சீனு.அவர்களுக்கு என்றும் கடுதாசி வந்ததில்லை. ஆனால் யார் யாருக்கு கடிதம் வந்திருக்கிறது என்ற ஆவல் அவர்களுக்கு எப்போதும் உண்டு.

கர்னல் ராம் அவர்கள் தம் குடும்பத்திற்கு எழுதிய அஞ்சல் மட்டும் இருந்தது. அவருக்கு லடாக்கில் பணி இருப்பதாகவும், அங்கு மிகவும் குளிராக இருப்பதாகவும் எழுதியிருந்தார். அடுத்த மாதத்தில் பணி உயர்வு கிடைக்கலாம் என்றும்  எழுதியிருந்தார்.உரை இட்ட கடிதம் அல்லாமல் இதுபோன்ற அஞ்சல் அட்டைகள் எழுதும் விபரங்கள் மற்றவர்களால் படிக்கப்படும் என்பது அவருக்கும் தெரியும். ஊர் மக்கள் அறியவேண்டும் என்பதற்காகவே விபரங்கள் அஞ்சலட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவரவர், அவர்களது பாதையில் செல்ல 8 மணி அளவில் சாருவும் சீனுவும் கெம்டியை சென்றடைந்தனர். அப்போது டாக்டர் பேகம் அவர்கள் ,தனது செல்லப் பிள்ளைகள் போல வளர்த்து வரும் செடிகளுக்கு தண்ணீர் வார்த்து கொண்டிருந்தார்.தனது நோயாளிகளை பார்ப்பதற்கு முன் தன் செடிகளோடு அலவலாவ அவர் விரும்புவார். சுமார் 50 வயதாகும் அவர், இருபது வருடங்களாக இந்தியாவில் வசித்து வருகிறார். தன் பணியின் முக்கால்வாசி நாட்களை மலையடிவாரங்களில் செலவிட்டு வந்துள்ளார்.

சீனு நடந்து வருவதை தூரத்திலேயே பார்த்த அவர், புன்னகை புரிந்தார். சீனுவையும் அவன் படிப்பிற்காக நடந்து வருவதையும் அறிந்தவர் ,இன்னும் பலர் அவன் போல் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார் . சிப்பி ஓடி சென்று அவரது வீட்டின் கேட்டில் கால்வைத்து நின்று குறைத்தது. அதற்காக எடுத்து வைத்த எலும்பை எடுத்து அவனிடம் கொடுத்தார்.


பள்ளியின் மணி அடிக்கும் சத்தம் கேட்டு சீனு ஓட்டம் எடுக்க, சிப்பியும் அவனுடன் ஓடிச் சென்றது. பள்ளிக்கு வெளியில் புல்வெளியில் அமர்ந்து அந்த எலும்பை கடிக்க ஆரம்பித்தது.சாயங்காலம் பள்ளி முடியும் வரை அது அங்கேயே இருக்கும்.அருகில் இருக்கும் சில நாய்கள் ,அதனது நண்பர்களாக இருந்தன.



திரு செபஸ்டின், சீனுவின் ஆசிரியர் அன்று மிகவும் கோபமாக இருந்தார். அவர் தம் தோட்டத்தில் அரியவகை சில ரோஜா செடிகளை வளர்த்து வந்தார்.காலையில் எழுந்ததும் அவை பூத்துக் குலுங்குவதை பார்ப்பது, அவருக்கு தனி சுகமாக இருந்தது. அன்று எழுந்ததும், அவருக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரது ரோஜா தோட்டத்தை சில ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை துரத்துவதற்கு முன்பே அவை ரோஜா செடிகள் பலவற்றை நாசமாக்கி விட்டிருந்தன.

அதனால் கடும் கோபத்தில் இருந்த அவர் காலை உணவையும் உட்கொள்ளவில்லை. அவருக்கு அது இன்னும் அதிக எரிச்சலை ஏற்படுத்தியது. சீனுவும் அதிகமாக கேள்விகள் கேட்டு அவரை எரிச்சல் படுத்தினான்.


உணவு இடைவேளைக்குப் பிறகு அவரது கோபம் சிறிது தணிந்தாற் போல் இருந்தது. அன்றைய நாள் எப்பொழுதும் போல் கழியவே, சீனு 4 மணி அளவில் பள்ளியை விட்டு வெளியே வந்தான். சிப்பி உடனே அவனை பின் தொடர செய்தது.


 மற்ற மாணவர்களைப் போல் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருக்காமல், காட்டை நோக்கி வேகமாக நடந்தான் சீனு. வெட்டிப்பேச்சுகளில் அவன் காலம் கழிக்க விரும்பவில்லை. 5 மைல் தூர பயணத்தை அவன் இருட்டுவதற்குள் முடிக்க விரும்பினான். யார் துணையும் இல்லாமல் இப்போது அவன் செல்ல வேண்டும்.

சிப்பி அவன் வருகையை பொருட்படுத்தாமல் காட்டிற்குள் விரைந்து ஓடியது.'பரவாயில்லை!!!! 'அவனுக்குப் புத்துணர்ச்சி கொடுக்கத்தான் அன்று ஒரு புது பாடலை ஆங்கில வாத்தியார் சொல்லிக் கொடுத்திருந்தாரே!!!!!! அடுத்த நாள் பள்ளியில் சென்று ஒப்பிக்க ,இப்போது நடுவழியில் அதனை பாடியபடியே செல்லலாம்....

காட்டை நெருங்கும் போதுதான் பூஜாவின் வளையல் நினைவிற்கு வந்தது. 'போகட்டும் மற்றொரு நாள் வாங்கிக்கொள்ளலாம். அவள் எப்படியும் அவனுக்கு பிடித்த உணவை தயார் செய்திருப்பாள் ' என்று எண்ணினான் சீனு. 

காட்டிற்குள் நுழைந்ததும் ஒரு நிசப்தம் அவனை ஆட்கொண்டது. எப்போதும் சலசலக்கும் சத்தத்துடன் இருக்கும் குரங்குகளையும் காணவில்லை. 'ஏதோ மர்மமா இருக்கே ' என்று முணுமுணுத்துவாறு மெதுவாய் நடந்தான். திடீர் என்று கேட்ட அழுகையால் அவன் கால்கள் நின்றன. அதிர்ச்சியுடன் நின்ற அவனுக்கு,  அது சிப்பியின் குரல் என்று நன்கு புரிந்தது...



சிறிது நிமிடத்திற்கு முன் அது சென்ற புதருக்கு அருகில் இருந்துதான் சத்தம் வந்தது.விரைந்து அங்கு சென்ற சீனுவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிப்பியை கூப்பிட்டும் ஒரு பயனும் இல்லை. சிறிது தூரத்தில் தனக்கு பழக்கப்பட்ட பொருள் ஒன்று கிடக்க, அதனை சென்று எடுத்தான். அது சிப்பியின் கழுத்தில் அவன் அணிவித்த மணி, ரத்தத்துடன். அது சிப்பியின் ரத்தம் தான் என்று தெரிந்ததும், அங்கு நிற்க அவனால் முடியவில்லை. 


தெளிவாக தெரிந்தது... சிப்பியை, சிறுத்தை தான் தூக்கிச் சென்று இருக்க வேண்டும் என்று. வேறு எந்த விலங்கும் இப்படி சத்தமில்லாமல் ஒரு பெரிய நாயை வேட்டை ஆடாது. பிடிபட்ட சிறிது நாழிகைக்குள் சிப்பி இறந்திருக்கக் கூடும்.


சிப்பியின் ரத்த அடையாளத்தை வைத்து அங்கு சென்றால், அங்கு தான் ஆபத்தில் சிக்க நேரிடலாம் என்பதை உணர்ந்த சீனு,வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான்.


 தன் உணவை கொடுக்க ஒருவர் இருந்தால் சிறுத்தை சும்மா விடுமா..கண்களில் கண்ணீருடன் கையில் சிப்பியின் மணியோடு வீட்டை நோக்கி ஓடினான் சீனு .

சீனு எதற்கும் உணர்ச்சிவசப்படுபவன் அல்ல. எனினும் சிப்பியில் மறைவு அவனை மிகவும் பாதித்தது. அன்று இரவு அவன் தூக்கத்தில் அங்குமிங்கும் புரண்டுக் கொண்டு இருந்தான். திடீரென்று பூஜாவின் கைகள் தன் நெற்றியைத் தடவி விடுவதைப் போல உணர்ந்தான். பழக்கமான அந்த கைகளை பாதுகாப்பிற்காக தன் தலையின் அடியில் வைத்துக் கொண்டு நன்றாக உறங்கினான்.



காலையில் வழக்கம் போல எழுந்து குளிக்க செல்கையில், தனியாக இருப்பது போல உணர்ந்தான்.அவன் அம்மா மதிய உணவை டப்பாவில் அடைத்து அவனிடம் கொடுத்தபோது கூட, சீக்கிரமாக பொழுது போவதற்குள் வந்து விடனும் என்று வேண்டுகோளும் அதனுடன் வந்தது. ஆனாலும் பள்ளிக்கு செல்வதில் இருந்து மட்டும் சீனு விலக்கு அளிக்கவில்லை. புலி வந்ததற்காக பள்ளி செல்ல வேண்டாம் என்று எண்ணினால், அவன் பள்ளிக்கு முழுக்குத்தான் போட வேண்டும்.



அன்று மிக சீக்கிரமாகவே கிளம்பி விட்டவன், விரைந்து காடுகளுக்குள் சென்றான். அன்று யாருக்கும் காத்திருக்கும் மனநிலையில் அவன் இல்லை. தபால்காரரும்  அன்று வரவில்லை. கெம்டியை அடைந்ததும் வழக்கம்போல மருத்துவரின் வீட்டை நோக்கினான்.. அவன் வருவதை தூரத்திலேயே உணர்ந்த அவர்,கையில் எலும்புடன் வாசலில் நின்று கொண்டிருந்தார். அதை பார்த்ததும் சீனுவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.



வெளியில் காட்டிக் கொள்ளாமல் பள்ளியை நோக்கி வேகமாக நடந்தான் அவன்.சிப்பி அவனுடன்  வராததை பார்த்த மருத்துவர்,அவனை நிறுத்தி விசாரித்தார். முந்தைய நாள் நடந்த விபரங்களை அவருக்கு தெரிவித்த பின், பள்ளியை நோக்கி ஓடினான் சீனு.

பள்ளியில், சிப்பியை பற்றிய செய்தி விரைவாகப் பரவியது. எல்லோரும் சீனுவிடம் அதை பற்றிய கேள்விகளை கேட்டனர். செபஸ்டின் கூட அவனுக்கு அதிக ஆறுதல் கூறிவிட்டு, வீட்டு பாடம் எதுவும் அளிக்காமல் சென்றார். மாலையில் கடைவீதியில் சீனு விற்கும் மற்றும் 2 மாணவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது.அதனால் சிப்பியைப் பற்றி அவன் சிறிது மறக்கலானான்.



மற்றொரு நாள் இரவு... மஞ்சரியில் புலி ஒன்று வந்தது. அது சாருவின் கிராமத்தில் புகுந்த புலி அல்ல. எல்லோரும் பயந்து நடுங்கும் மனிதனை விழுங்கும் இளம்புலி.


9 வயது பையனான சஞ்சய் தான் அதனிடம் முதலில் அகப்பட்டது. கலாம் சிங்,சஞ்சயின்  தந்தை, தன் குடும்பத்துடன் மஞ்சரியின் எல்லையில் ஒரு தனி வீட்டில் வாழ்ந்து வந்தார். அது ஆற்றுக்கு அருகில் இருந்தது.ரம்மியமான ஒரு வீடு. தரைப்பகுதியில் இருந்து சிறிது உயர்த்தி கட்டப்பட்டு இருந்தது அந்த வீடு. சஞ்சயும் அவனது அண்ணனும் மாடு மேய்க்கும் வேலையைச் செவ்வனே செய்து வந்தனர்.


அன்று இரவு 7 மணி இருக்கும். அனைவரும் உணவு உண்டு உறங்கி விட்டனர். சஞ்சய் எப்பொழுதும் கதவருகில் உறங்கும் பழக்கம் உள்ளவன் ஆதலால் ,கதவைத் திறந்து வைத்துக் கொண்டு தூய்மையான காற்றை சுவாசித்தவாறு தூங்கிக்கொண்டிருந்தான்.


அப்போதுதான் அது மெதுவாக நகர்ந்து வந்தது. ஏணியில் ஏறி தன் இரையைத் தேடி சென்றது. அதற்கு ஏதுவாக மாட்டிய சஞ்சயின்  மண்டையைக் பிடித்து இழுத்துக்கொண்டு கீழே வந்தது.


அவன் போட்ட சத்தத்தில், மொத்த ஊரும் திரண்டுவந்து புலியை விரட்டியது.தன் இரையைப் பறிகொடுத்த புலியோ ஒரே பாய்ச்சலில் அருகில் இருந்த காட்டை நோக்கி ஓடியது.


கலாம் சிங்கின் மனைவி, ரத்த வெள்ளத்தில் இருக்கும் தன் பிள்ளையை பார்த்து அழுது கொண்டிருந்தாள். சஞ்சயின் ஒரு பக்கம் மண்டை சிதைந்து எலும்பு வெளியே தெரிந்தது. வலியால் அவன் முனகிக் கொண்டிருந்தான். அதனை பார்த்த சிலர் காலையில் அவனை ஆற்றங்கரைக்குத் தான் தூக்கிச் செல்ல வேண்டும் என்று கலாம் சிங் காதுபடவே பேசினர்.அங்குதான் அவர்கள்  
வழக்கப்படி பிணத்தை எரிப்பர்.



காலை வரை அங்கே இருந்த சஞ்சயின் குடும்பத்தினர் காலையிலும் சஞ்சய் வலியால் முனைகி கொண்டிருப்பதைக் கண்டனர். கலாம் சிங், தன் மூத்த மகனை வீட்டில் உள்ளோருக்கு காவல் வைத்துவிட்டு சஞ்சயை தூக்கிக்கொண்டு கெம்டி நோக்கி நடந்தார்.


மருத்துவர் அவரைப் பரிசோதித்துவிட்டு காயத்திற்கு மருந்திட்டு ,காயம் அழுகாமல் இருக்க ஊசிகள் போட்டார்.சஞ்சய் அங்கேயே இரண்டு நாட்கள் இருந்து,சிறிது  உடல் தேறியதும் தந்தையுடன் வீடு திரும்பினான். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மருத்துவரை சென்று பார்த்து வந்தனர் சஞ்சயும் அவன் தந்தையும்.


புலியால் ஊரே மிரண்டு கிடக்கும் வேளையில், சீனு எவ்வாறு பள்ளி செல்ல இயலும். மற்ற பிள்ளைகளைப் போல பள்ளி செல்ல முடியாததற்கு அவன் மகிழவில்லை.விரைவில் தேர்வு வர இருப்பதால் மிக முக்கிய சில பாடங்களைத், தான் கவனிக்காமல் இருப்பதை நினைத்து வருந்தினான்.எனினும் வயலில் வேலை செய்த நேரம் போக மற்ற நேரங்களில் தன்னிடமிருந்த பாட புத்தகங்களை படித்த வண்ணம் இருந்தான்.இவ்வாறு பத்து நாட்கள் சென்றது.


சஞ்சயின் காயங்களும் கூட சிறிது குணமடைந்திருந்தது. சீனு தன் அன்னையிடம் மறுபடியும் பள்ளி செல்ல அனுமதி கேட்டான். இரண்டாவது வார இறுதியில் கலாம் சிங்கும் சஞ்சயும் கெம்டி செல்லும் போது ,அவர்களுடன் பள்ளி செல்ல அனுமதியும் பெற்றான்.


மறுபடியும் காட்டிற்குள் நுழையும்போது, காடு புதுப்பொலிவுடன் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. வழக்கம்போல குரங்குகள் அங்கும் இங்கும் ஓடியபடியிருந்தன. வழியில் அவர்களை பார்த்த தபால்காரர், அவர்கள் ஊருக்குள் வந்த புலி வேறு ஊருக்கு சென்று விட்டதாகத் தகவல் தெரிவித்தார்.நிம்மதியுடன் பள்ளியை அடைந்தான் சீனு.அங்கு அவனை பார்த்த ஆசிரியர்கள், மிகவும் அதிக முயற்சி எடுத்து விடுபட்ட பாடங்களை படிக்க வலியுறுத்தினர்.

மழைக்காலம் இன்னும் தொடங்கவில்லை.சீனு தன் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான் திடீரென்று மழை பெய்தது.செய்வதறியாது திகைத்த அவன், ஒரு ஓரத்தில் இருந்த குகைக்குள் அடைக்கலம் புகுந்தான். மழை அதிக நேரம் வலுக்காது என்று கனித்தவன், அங்கேயே அமர்ந்து தன் கணக்குப் பாடங்களை எழுதிக் கொண்டிருந்தான். அரை மணி நேர இடைவெளியில், மழையும் நின்றது. குகையை விட்டு வெளியே வந்தவன், காட்டிற்குள் மண்வாசனையை சுவாசித்தவாறு மகிழ்ச்சியாக நடக்கத் தொடங்கினான்.


அங்கிருந்த மரங்கள் புது பொலிவுடன் காட்சி அளித்தன. குரங்குகளும் மகிழ்ச்சியில் சப்தமிட்டவாறு, அங்குமிங்கும் ஓடி விளையாடின.காட்டைவிட்டு வெளியேறி வெளியேற இன்னும் சிறிது தொலைவு அவன் செல்ல வேண்டும். அப்போது ஒரு ஆட்டுக்குட்டி அவனை நோக்கி ஓடிவருவதை அவன் கண்டான். அது தன் வழியைத் தொலைத்திருக்க வேண்டும். யாராவது வந்து கேட்கும்வரை நம்மிடம் வைத்திருக்கலாம் என்று எண்ணி அதனிடம் சென்றான்.

அதன் அருகில் சென்றதும், சிறு தொலைவில் இருந்து ஒரு உறுமல் சத்தம் கேட்டது.அது ஒரு புலியின் உறுமல் என்று உணர்ந்த அவன்,சில்லிட்டு நின்றான். இன்னும் சிறிது தூரம் சென்றால் காட்டை விட்டு வெட்டவெளியில் செல்ல வேண்டி வரும். புலி வெகு அருகில் இருப்பது போல அவனுக்குத் தோன்றியது.


யோசிக்காமல் அந்த ஆட்டை தூக்கியவன் அருகிலிருந்த மரத்திலேறினான். ஒரு கிளையில் நன்கு அமர்ந்து ஆட்டையும் அமரவைத்து, இலைகளுக்கு நடுவில் இருந்து அருகிலிருந்த பாதையை பார்த்துக்கொண்டிருந்தான்.

அது மிருகங்களை மட்டும் விழுங்கும் கிழப்புலியாக இருந்தால், சீனு அருகில் இருப்பதை பார்த்து விட்டு விலகிச் சென்றுவிடும். அதுவே மனிதனையும் உட்கொள்ளும் இளம்புலியாயிருப்பின் ,அதனிடம் தானும் சிக்க நேரிடும். இவ்வாறு எண்ணமிட்டபடி பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு புலியின் 🐅வருகை தென்பட்டது. 


அவன் முன்பு நின்ற இடத்திற்கு வந்த புலி 🐅சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பெரிய உறுமல் சத்தத்தை வெளியிட்டது. அதனைக் கேட்ட ஆட்டுக்குட்டியும் சீனுவும் நடுங்கினர். மனிதனையும் விழுங்கும் இளம்புலி அது. அங்கிருந்து சுற்று முற்றும் பார்த்த அது, ஒரு திசையில் சீனுவும் ஆட்டுக்குட்டியும் மரத்தின் மேலமர்ந்து இருப்பதைக் கண்டு பெரிதாக உறுமியது.

 ---- தொடரும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பலாமரம்

Book review - perfectly imperfect

Book review 10- when the clock strikes thirteen