சொக்கநாத சரிதம்
சொக்கநாத சரிதம்
'அம்மா !!!!' என்ற அலறல் குதிரையின் சென்று கொண்டிருந்த அவ்வீரனை திகைப்படையச் செய்தது. அது அந்தி சாயும் நேரம். அடர்ந்த காடு. இதனுள் ஒரு பெண்ணின் குரல் கேட்டதால் வந்த திகைப்பு அது.
ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், குரல் வந்த திசையை நோக்கி சென்றான் அவன். காரிருள் சூழ்ந்திருந்தது போல அங்கு ஒரு யானை ஒரு யுவதியை மிதிக்க தயாராகிக்கொண்டிருந்தது. அவளைக் காப்பாற்ற யானையை திசை திருப்ப வேண்டும் என்று அவன் எண்ணினான். அதற்காக கையிலிருந்த கூர்வாளை அதனை நோக்கி விட்டெறிந்தான். அடி வாங்கிய அந்த யானை, அது நாடி வந்த யுவதியை விட்டு விட்டு வாளை விட்டெறிந்த இளைஞனை நோக்கி திரும்பியது. அந்த மத யானையிடம் இருந்து தப்பிக்க, அங்குமிங்குமாய் குதிரை ஓட்ட ஆரம்பித்தான் அவன் . தான் போக வேண்டிய இடத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒரு திசையில் அவன் சென்றான் .சிறிது நேரம் அவனைப் பின்தொடர்ந்து வந்த அந்த யானை சிறிது நேரத்திலேயே பின்வாங்கி வேறு திசையில் சென்றது. அது சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டு தான் வந்த அந்த இடத்தை அடைவதற்கு அவனுக்கு சுமார் ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். அங்கு சென்று பார்த்ததில் அப் பெண்ணை காணவில்லை. உடனே அவன், 'நன்றி கெட்டவள்!!! தன்னை காப்பாற்றியவர் உயிரோடு இருக்கிறாரா என்று கூட தெரியாமல் ஓடி இருக்கிறாள்' என்று நினைத்துக்கொண்டான். தன் கூடாரத்தை நோக்கி மெதுவாக தன் குதிரையை விட்டான். அவனுக்கு தெரியாது அவனுக்காக அவள் இவ்வளவு நேரம் காத்திருந்து இப்பொழுதுதான் அவன் எறிந்த வேலை தூக்கிக் கொண்டு சென்றாள் என்று.
அது நாயக்கர் வாழ்ந்த காலகட்டம். திருமலை நாயக்கர் இறந்து மூன்று வருடமே ஆன நிலையில் ,அவரது மகன் முத்து அழகிரி நாயக்கர் போரில் ஏற்பட்ட காயங்களால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஒரு சாரார் அவர் மீண்டு வருவார் என்று கூறிக் கொண்டு இருக்கையில், பலரும் இளவரசர் சொக்கநாத நாயக்கர் தான் பீடத்தில் அமர்வார் என்று நினைத்தனர். 16 வயதேயான இளம் காளை சொக்கநாதர், அப்போதே அனைவரிடத்திலும் புகழ் பெற்றிருந்தார். அவர்கள் நினைத்தது போலவே அரசர் அழகிரி நாயக்கர் சிறிது நாட்களில் உயிர்நீத்தார்.
பதவிக்கு ஆசைப்படாமல், சக வீரர்களுடன் வாள் மற்றும் வில் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சொக்கநாத நாயக்கருக்கு தன் தந்தையின் இழப்பு பெரும் வருத்தத்தை அளித்தது. அரியணையில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தவன், 16 ஆம் அகவையில் அரியணை ஏறினான். அவனது வீரத்தை குறைத்து மதிப்பிட்டு அவனுக்கு எதிராக பலர் திரும்பினர் .அவர்களோடு போரிட்டு பல வெற்றிகளைக் குவித்தான் அக்காளை. இவ்வாறு ஒரு பத்து ஆண்டுகள் சென்றிருக்கும்.
அப்போது தஞ்சையை நாயக்கர்கள் தான் மதுரை நாயக்கர்களுக்கு பெரும் எதிரியாக இருந்தனர். தற்போதைய நிலையில் மதுரையை அவர்கள் எந்நேரமும் தாக்கலாம் என்று எண்ணிய சொக்கநாதர், எல்லைகளை பாதுகாக்கப் பயணம் மேற்கொண்டார். அவ்வாறு சென்றவர், அங்கு படைகளுக்கு உத்தரவு பிறப்பித்தது மட்டுமல்லாமல் நாட்டின் எல்லை படையை உருவாக்கி, போர் முறையைக் கற்றும் கற்பித்தும் வந்தார்.
அவருக்கு உற்றதுணையாக, வருங்கால தளபதி பரஞ்சோதியும் கூடவே சென்றான். இரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்தால் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்குமா !!! அன்று நன்றாய் பயிற்சி எடுத்த பிறகு, அருகில் இருக்கும் காட்டை ஆராய சொக்கநாதர் யாரிடமும் சொல்லாமல் தனியே சென்றபோதுதான் மேற்கூறிய சம்பவம் நிகழ்ந்தது.
தாம் அவ்வேளையில் கூடாரத்தில் இல்லை என்ற செய்தி பரவினால் ,வீணான குழப்பம் உண்டாகும் என்று நினைத்த சொக்கநாதர், விரைந்து அங்கு சென்றார். அவர் நினைத்தது போலவே பரஞ்சோதி அங்கு குதிரையுடன் சில வீரர்களை அழைத்து பல்வேறு திசைகளில் தேட ஆணை பிறப்பித்து கொண்டிருந்தான். சொக்கநாதரை தூரத்தில் பார்த்ததும், அவனுக்கு மிக்க மகிழ்ச்சி .'சொக்கநாதா!!!! இந்நேரம் வரை தனியாக எங்கே சென்றாய்?!!! ராணியார் கூறிய அறிவுரைகளை மறந்து விட்டாயா?!!!!' என்று பதறியபடி கேட்டான்.
'பரஞ்சோதி!!!! எதற்காக இந்தப் பதட்டம்!!! நிலவொளியில் குளுமையாக சிறிது நேரம் காட்டில் உலாவினேன். அவ்வளவுதான் !!'என்று அவர்களை அழைத்து சமாதானப்படுத்தி விட்டு உறங்கச் சென்றார்.
பரஞ்சோதி மட்டும் சொக்கநாதருடன் எப்பொழுதும் இருக்கும் கூர்வாள் இப்போது இல்லை என்பதை குறித்துக்கொண்டான்.
அவள்
தன்னைக் காப்பாற்றிய இளைஞனைப் பற்றிதான் அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.' என்ன ஒரு தேஜஸான முகம் பளீரிடும் கண்கள்அவனுக்கு உன் கண்டிப்பாக ஒன்றும் ஆகியிருக்காது மதம் பிடித்த யானையை நோக்கி ஒருவன் மேல் அறிந்தால் அவன் எவ்வளவு பெரிய வீரனாக இருக்க வேண்டும்' என்று அவள் நினைத்தாள்.அவன் சென்ற சிறிது நாழிகையில் தன்னைத் தேடி வந்த பாதுகாவலர்களிடம் எப்படியாயினும் அவனை அழைத்து வந்தே தீர வேண்டும் என்று ஆணை பிறப்பித்து விட்டு, தான் மாளிகை வந்தது பிழையோ என்றெண்ணினாள்.
அவனுக்காக சிறிது நேரம் காத்திருந்து இருக்க வேண்டுமோ!!! என்று எண்ணினாள்.அவனைத்தேடி சென்றவர்கள் அவனைக் காணாது திரும்பி வந்தபோது அவளுக்கேற்பட்ட ஏமாற்றத்தை விவரிக்க இயலுமோ!!!!!
அவன் விட்டெறிந்து சென்ற வாளை எடுத்து உற்று நோக்கினாள். 'சொக்கநாதன்' என்று அதில் பேர் பொரிந்து இருந்தது. அவளுக்கு ஒரு நிமிடம் உடல் சிலிர்த்தது. ஒருவேளை இவர் மதுரை சொக்கநாத நாயக்கர் ஆக இருக்குமோ!! என்று எண்ணினாள்!! இல்லை அவரிடம் வேலை செய்பவராக இருக்குமோ!!!! என்று கணக்கிட்டாள். சொக்கநாதரை பற்றி அவள் கேள்விப்பட்டு இருந்தாள். அவளது தந்தை தஞ்சை விஜயராகவ நாயக்கருக்கும் சொக்கநாதருக்கும் இருக்கும் பகைமையும் அவளுக்கு நன்றாக தெரியும்!!. அவன் மட்டும் சாதாரண போர் வீரனாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணினாள்.
அவளுக்கே ஒரு வியப்பு உண்டாயிற்று. பார்த்த முதல் பார்வையிலேயே அவனிடம் அவள் மனதை பறிகொடுத்து விட்டாளோ!!! இருக்கலாம்!! ஆனால் அவளால் மறுபடியும் அவனை சந்திக்க முடியுமா !!!அதற்கான சந்தர்ப்பத்தை உண்டாக்க முடியுமா!!! என்று எண்ணலானாள்.
அவள் தற்போது சில நாட்கள் சுற்றுலா செல்வது போல் தஞ்சையை விட்டு விட்டு, அங்கையர் அரண்மனைக்கு வந்து இருந்தாள். தன் தோழிகளை விட்டுவிட்டு தான் மட்டும் அருகிலிருந்த காட்டிற்குள் உலாவச் சென்றாள். வழிதவறி வெகுதூரம் சென்ற போதுதான் அவள் யானையிடம் சிக்கியது.
அவளே ஒரு சித்திரப்பாவை!! அவளுக்கு சித்திரபிரமை உண்டு. எழில் கொஞ்சும் நிலவொளியில் காட்டிற்குள் இருக்கும் உலகத்தை மனதில் பதித்து, சித்திரம் வரைய வேண்டும் என்று அவள் நினைத்துக் தனியாகக் காட்டிற்குப் போய் யானையிடம் 🐘 மாட்டிக் கொண்டாள். தற்போது காட்டிற்குள் தன்னை காப்பாற்றிய அந்த வீரனை மட்டும்தான் அவளது மனம் பதித்து வைத்திருந்தது. தூரிகையை எடுத்து அதற்கு வடிவம் கொடுத்தாள்.
அம்பிகை என்றொரு தூதர் பெண் அவளிடம் பணி புரிந்தாள். மிகவும் சாமர்த்தியசாலி!!!! அவளிடம் வரைபடத்தை கொடுத்தால் என்னவாகும் என்று யோசித்தாள்..அவ்வீரனை அழைத்து வர மடல் ஒன்றையும் எழுதி அதனையும் அவளிடம் கொடுத்தனுப்பினாள். அவன் அருகில் இருக்கும் ஏதோ ஒரு கிராமத்தில் தான் இருப்பான் என்று அவளுக்கு தோன்றிற்று. அம்மடல் அவனை எப்படியும் தன்னிடம் அழைத்து வரும் என்றும் நம்பினாள்.
தஞ்சை
விஜயராகவ நாயக்கர் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். அவரது மனம் மதுரையை சுற்றியே வலம் வந்தது. முத்துநாயக்கர் இறந்ததில் இருந்து, மதுரையை கைப்பற்ற வேண்டும் என்று அவர் பெரும் முயற்சிகளை எடுத்து தோற்றிருந்தார்.
முதலில் சிறுவன் தானே ! என்று நினைத்து, தானே இறங்காமல் சிற்றரசர்களை அவனுக்கு எதிராக நகர்த்தினார். எதற்கும் அசராதவன் போல் அவன் அவர்களது ஆட்சியை மதுரையின் அடியில் சேர்த்த போது தான் அவனது பலம் அவருக்கு உறைத்தது. அடுத்த சில ஆண்டுகளில், தஞ்சையில் பெரும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இந்நிலைமையில் மக்களை போருக்கு அழைப்பது அவருக்கு அவ்வளவு உசிதமாக தெரியவில்லை. தனது ஆட்சியை நன்றாக நிலைநிறுத்திக் கொண்டு தான், இனி போருக்கு போக வேண்டும் என்று நினைத்தார். திருமலை நாயக்கர் (சொக்கநாதரின் தாத்தா) ஆட்சி காலத்தில் தோன்றிய பகை அது.
திருமலை நாயக்கர் தஞ்சை நாயக்கரின் தங்கையை தான் மணம் முடித்திருந்தார்.அப்பொழுது இரண்டு அரசும் நட்புடன் தான் இருந்தது.அவர் திருமணம் செய்து, இரண்டே ஆண்டுகளில் அரசி சந்திரவதனா மர்மமான முறையில் இறந்ததாக செய்தி பரவியதே பகைக்கு முதல் படியானது. அவளை திருமலை நாயக்கரே கொன்றதாகவும் செய்திகள் பரவின.அதற்கான விசாரணை கூட நடக்கவில்லை. தகவலறிந்து அப்போதிருந்த தஞ்சை நாயக்கர், அங்கு செல்வதற்குள் அரசி சாம்பலாகி இருந்தாள். திருமலை நாயக்கர் மீது வீண் பழி சுமத்த வதந்திகள் வந்ததாக ஒரு சாரார் நம்பினர். எனினும் இது பெரும் பகை ஏற்படுத்தியது.அதன்பின் தஞ்சையும் மதுரையும் எப்போதும் ஒரே கட்சியில் இருந்ததில்லை.
அவ்வழி வந்த விஜயராகவ நாயக்கருக்கு மதுரையின் மேல் இளம் பருவத்திலேயே பகையுணர்சசி ஏற்பட்டிருந்தது. தக்க சமயத்தில் மதுரையைத் தாக்கத் தயாராகிக் கொண்டிருந்தார். அவரது மகளுக்கும் சந்திரவதனா என்றே பெயரிட்டிருந்தார் .அழகில் நிலவை ஒத்திருந்தாள் அவள். அவளை அருகில் இருக்கும் சிற்றரசர் எவருக்கேனும் திருமணம் செய்து வைத்து, அதன் மூலம் மதுரைக்கு எதிரான பலம் பொருந்தியக் கட்சியை உருவாக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தார்.
அம்பிகை
அம்பிகை ஏற்ற காரியம் அவ்வளவு சுலபமாக இல்லை. ஆண்பிள்ளை என்றால் கூட வீரர்கள் எவருடரேனும் நட்பு வட்டத்தை உருவாக்கி, அவர்களிடம் வரைபடத்தை காட்டி விசாரிக்கலாம். இப்பொழுது அது மிகவும் கடினமாக இருந்தது. எனினும், அவள் அருகில் இருந்த ஊர்களில் தனது நம்பிக்கைக்குரியவர்களிடம் வரைப்படத்தை காண்பித்து விசாரித்து பார்த்தாள். எவருக்கும் அவ்வீரனை அடையாளம் தெரியவில்லை.
அது தஞ்சைக்கும் மதுரைக்கும் இடையில் இருக்கும் எல்லைப்பகுதி. அவ்வூர் மக்கள், தங்கள் அரசரையே பார்த்ததில்லை. சொக்கநாதர் படையுடன் வந்திருக்கிறார் என்றதும், ஊர் மக்கள் அனைவரும் சென்று அரசரை பார்க்க விரும்பினர். ஆனால் அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. அரசர் சேர்ந்தாற்போல் இரண்டு நாட்கள் ஒரு இடத்தில் இருந்தது இல்லை. அவரது சைனியம் மிகப்பெரியதாக இருந்தது. அவர் வீரர்களோடு வீரராக கலந்து போர் பயிற்சியை கண்காணித்து வந்தார்.பல நேரங்களில் மாறுவேடத்தில் இருப்பவரை எவ்வாறு கண்டுபிடிப்பது.
சொக்கநாதர் அன்று தான் முக்கிய அலுவல் காரணமாக மதுரை சென்றிருந்தார்.
அம்பிகை தன்னை ஆண் வீரனைப் போல அலங்கரித்துக்கொண்டு, சைனிய வீரர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்றாள். அங்கு ஊர் மக்கள் சிலர் சேர்ந்து, வீரர்களுக்கு உணவு தயாரித்து வழங்கி வந்தனர். அவளும் அவர்களுக்கு உதவுவதுபோல் வீரர்களுக்கு உணவு படைத்தாள். சைனியம் முழுவதும் தேடியும் எப்பயனுமில்லை.
அவள் அவ்வாறு வந்த ஐந்தாம் நாள், துரதிஷ்டமாகவோ அல்லது அதிர்ஷ்டவசமாகவோ கரடி ஒன்றிடம் மாட்டிக் கொண்டாள். திடீரென்று ஏற்பட்ட பயத்தினாலோ அல்லது இருளின் காரணமாகவோ அவளால் ஓடத்தான் முடிந்ததே தவிர தன்னிடமிருந்த கத்தியை கொண்டு அதனிடம் சண்டையிட முடியவில்லை . அவள் ஓடி வந்து நின்றது பரஞ்சோதியின் கூடாரத்தின் முன்பு. கூடாரத்தின் நடுவில் நெருப்பு மூட்டி இருந்தனர். அதனைப் பார்த்த அவள், அங்கு சென்று பந்தங்களை எடுத்து வந்து கரடியை மிரட்ட பார்த்தாள். அந்த கண நேரத்தில் தான் அது நடந்தது. அவள் இடுப்பில் வைத்திருந்த வரைப்படம் நழுவி கீழே விழுந்தது. அங்கிருந்த வீரர்கள் சிலர் அவளுக்கு உதவியாக கரடியை விரட்டியடித்தனர்.
சத்தம் கேட்டு வந்த பரஞ்சோதி, அந்த வரைபடத்தை எடுத்து பார்த்தான்.
சொக்கநாதர்
மதுரை சென்ற சொக்கநாதருக்கு ஆட்சியில் ஒரு சிக்கல் ஏற்பட்டு இருந்தது. வரிவசூலில் பிரச்சினை வந்தது. மற்ற நாடுகளைக் காட்டிலும் மதுரையில் அதிக வரிவசூல் நடப்பதாக எதிரிகள் வதந்திகளை கிளப்பி விட்டு இருந்தனர். உள்நாட்டுக் கலகம் மூள்வதற்குள் அதனை சரிசெய்ய வேண்டும் என்று சொக்கநாதர் விரும்பினார். மறவரைப் போல மாறுவேடம் தரித்து மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.
மதுரையில் அப்போதிருந்த தனியார் சத்திரங்கள் அதிகமாக கட்டணம் வசூலித்தன. அவற்றிற்கான வரிகள் பல வருடங்களாக ஏறாமல் இருந்தது.மந்திரிகளுடன் ஆராய்ந்து, பழைய கோப்புகளையும் சரிபார்த்து, ஒவ்வொரு தொழிலுக்கும் விதம் விதமாய் கட்டணம் பிறப்பித்தார்.இதனால் பலரும் பயனடைந்தனர். விவசாயிகளின் மேல் திணிக்கப்பட்ட வரி சிறிது தளர்ந்தது. அரசே இலவசமாக சத்திரம் திறந்தால், ஏழை எளியோர் பயன் அடைவர் என்று எண்ணி, சத்திரம் அமைக்க ஆணை பிறப்பித்தார்.(அன்று அவர் அமைத்த சத்திரமே பின்னாளில் மங்கம்மாள் சத்திரம் என்ற போற்றப்பட்டது. இன்றும் இது, தமிழக அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.)
அவர் அவ்வாறு சில கோப்புகளை ஆராயும் போதுதான், திருமலை நாயக்கரின் நாட்குறிப்பு ஒன்று கண்ணில் பட்டது. அக்காலத்தில் ராஜாக்கள் தம் வாழ்நாளில் முக்கியமாக கருதப்பட்ட சில நிகழ்வுகளை இவ்வாறு குறிப்பதும் உண்டு. அதில் தமது பிரச்சினைகள் பலவற்றுக்கும் விடை காணலாம் என்று எண்ணி, அதனை மட்டும் பத்திரப்படுத்திக் கொண்டார் சொக்கநாதர்.
திருமலை நாயக்கர்
பல போர்களில் வென்று, மதுரை திருமலை நாயக்கர் ஆட்சி எல்லைகளை விரிவுபடுத்தினார். இவரது ஆட்சியில் தான், நாயக்கர்களின் தலைநகரம் மதுரை என்றானது. மைசூரில் எதிரிப் படைகளின் தாக்குதல் அதிகமாக இருந்ததால், மையப்பகுதியில் இருந்த மதுரையை தலைநகரம் ஆக்கினார் திருமலை நாயக்கர். இளம் வயதிலேயே அரியனை ஏறி பல சாகசங்கள் புரிந்த திருமலை நாயக்கருக்கு, ஏற்ற மணமகளைத் தேடி அலைந்தார் அவரது தாயார்.
அப்போதுதான், தஞ்சை நாயக்கரின் தங்கை சந்திரவதனாவைப்பற்றி வியாபாரிகள் மூலம் அறிந்தார். பெயருக்கேற்றபடி சந்திரனை ஒத்த பொலிவுடன் விளங்கிய சந்திரவதனாவை நாயக்கரின் இராணி ஆக்கினார் அவரது தாயார்.
நாயக்கர் போரில் சிறந்து விளங்கினாலும், மதுரையின் கட்டடக்கலையில் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. தஞ்சையில் மிகப்பெரிய அரண்மனையில் இருந்த இளவரசிக்கு, இது பலத்த அடியாக இருந்தது. அதன் அடிப்படையில் அவள் 'இவ்வரண்மனை தஞ்சை அரண்மனையில் கழிவறைக்கு ஈடாகுமா !!!'என்று வாய் தொடுக்காக கேட்டாள். கொதித்தெழுந்த திருமலை நாயக்கர், அடுத்த ஒரே வருடத்தில் பெரிய அரண்மனை ஒன்றை கட்டினார். தஞ்சையை விட மதுரையை சிறப்பாக அழகிய கலைக்கூடங்கள் பல கட்டினார்.மதுரையே எழில்மிகு நகரம் நகரமாக உருமாறியது.
தஞ்சையின் மீது ஏற்பட்ட இந்த புகைச்சல், அவரை இந்நிலைக்கு தள்ளிற்று. அதன்பின் சந்திரவதனாவை அவர் கவனிக்கத் தவறிவிட்டார். தன் வார்த்தையால் கணவனின் மனது புண்பட்டது என்று நினைத்து, பல முறை அவள் தன்னை மன்னிக்கக் கோரினாள். இதுவே இறுதியில் மன நோயாக மாறி அவளைக் கொன்றுவிட்டது. (அவளது இறப்பிற்குப் பிறகு திருமலைநாயக்கர் கடவுள் வழிபாட்டில் அதிக ஈடுபாடு கொண்டு வாழ்ந்தார் என்கிறது வரலாறு.)
சொக்கநாத நாயக்கர்
திருமலை நாயக்கரின் வாழ்வைப் பற்றிய குறிப்புகளைப் பார்த்ததும் சிறிது வருத்தமாகவும் அதே சமயம் திகைப்பாகவும் இருந்தது. திருமலைநாயக்கர் கட்டிய கலைக்கூடங்கள் அவர் கண்முன் தோன்றின. அதன் பின் இப்படி ஒரு கதை இருப்பதை அவர் இந்நாள் வரை அறிந்ததில்லை.
அக்குறிப்பைப் படித்து முடிக்கும் போது தான் பரஞ்சோதி இடமிருந்து செய்தி வந்தது.
அரசே!!!!
வந்தனம்!!.தாம் ஏற்ற காரியம் வெற்றி பெற்றிருக்கும் என நம்புகிறேன். !! இதனோடு இன்னொரு கடிதத்தையும் வரைபடத்தையும் இணைத்துள்ளேன்.அவை ஒரு பெண் தூதர் மூலமாக என்னிடம் வந்து சேர்ந்தது. அப்பெண்ணை இங்கே சிறைபிடித்து வைத்துள்ளோம்.இதில் ஏதாவது எதிரிகளின் சதி இருக்குமோ என்ற ஐயம் எனக்கு உண்டு. தக்க முடிவு எடுத்து ,நான் அனுப்பிய தூதன் மூலம் பதில் அளிக்க வேண்டுகிறேன்.
பரஞ்சோதி
வரைபடத்தை வாங்கிப் பார்த்த சொக்கநாதருக்கு வியப்புண்டாயிற்று. அன்று தான் யானையைப் பார்த்து வேல் எறியும் காட்சி தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. ஒரு மூலையில்தான் காப்பாற்றிய பெண் நடுநடுங்கி கொண்டிருப்பதும் இருந்தது. அன்றிருந்தப் பதட்டத்தில் அவளை சரியாக கவனிக்காதவர், இன்று உற்று நோக்கினார். அந்த கண்களில் மிரட்சியைத் தாண்டி ஒரு குழந்தைத்தனம் இருப்பதை உணர்ந்தார். நிலவே உருவெடுத்து வந்ததோ என்று அவருக்கு ஐயம் ஏற்பட்டது. மோகத்தால் அழிந்த அரசர்கள் பட்டியலில் தானும் சேர்ந்தால் என்னவாகும் என்று எச்சரிக்கை உணர்வும் அவருக்கு ஏற்பட்டது. பரஞ்சோதியின் எச்சரிக்கையும் அவருக்கு புரிந்தது. அந்த படத்தோடு வந்த கடிதத்தை எடுத்துப் படித்தார்.
என் உயிர் காத்த வீரரே,
உமக்கு என் வந்தனம். தவிர்க்க முடியாத சூழலால் தங்களுக்கு நன்றி கூற கூட என்னால் முடியவில்லை. தங்களது உடைமையான வாள் ஒன்று என்னிடம் பாதுகாப்பாக உள்ளது .நான் தங்களை சந்தித்த காட்டின் அருகிலுள்ள அங்கையர் அரண்மனையில்தான் தங்கியுள்ளேன். தங்களை சந்தித்து தங்களுடைய உடமையைத் தங்களிடம் சேர்க்க சித்தமாக உள்ளேன். மறுக்காமல் என் மடலை ஏற்று விருந்துண்ண வருவீர்கள் என்று நம்புகிறேன் .
தங்களை காண துடிக்கும்,
சந்திரவதனா
அதே பெயர். அப்பெண்ணின் உண்மையான அடையாளத்தை அறிய அவர் மனம் துடித்தது. இவளுக்கும் தஞ்சை நாயக்கர்களும் சம்பந்தம் இருக்க கூடாது என்று எண்ணினார். இவளுக்காக தூது வந்த பெண்ணை தானே சென்று விசாரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது. அவசர அலுவல்கள் மதுரையில் முடிந்த காரணத்தால் அன்றிரவே அவரது படை இருக்கும் இடத்தை நோக்கி சென்றார்.
சந்திரவதனா
அம்பிகை சென்று இரு வாரத்திற்கு மேல் ஆகிறது.அவளிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை.அம்பிகையால் இவ்வளவு விரைவில் கண்டுபிடிக்க முடியாது என்று தெரிந்தாலும்,நாளாக ஆக அவ்வீரனைக் காணும் ஆவலை அடக்க முடியவில்லை.
இவ்வாறு சென்றால் அவன் வரும்போது தன்னை அறியாமல் தன் முகமே தன் மனதை காட்டிக் கொடுத்து விடுமோ!! என்று அவள் பயந்தாள். தினமும் அவனது வாளைப் பார்க்கும் போது அவனே அங்கு நிற்பது போல் அவளுக்கு தோன்றியது. அவனை சந்தித்த இந்த இரண்டு வாரத்தில் அவள் பல ரூபங்களில் அவனை வரைந்து விட்டாள். பட்டாம்பூச்சிகளின் இறகுகளில் கூட அவனது கண்கள் தான் தென்பட்டன.
உலகை மறந்து தன்னிச்சையாய் அவளது கைகள் அவனை வரைந்தன. அவள் இப்படி இருக்கும் தருணத்தில் தான் அவளைப் பார்க்க தூதன் ஒருவன் வந்திருப்பதாக அவளுக்கு செய்தி கிடைத்தது. ஒரு வேளை அம்பிகை தான் செய்தி அனுப்பியிருப்பாளோ அல்லது அவரே செய்தி சொல்லி அனுப்பி இருப்பாரோ என்று எண்ணினாள்.
அத்தூதர் அளித்ததாக கூறி ஒரு கடிதத்தை பணிப்பெண் கொடுத்தாள். அதில் ,
சந்திரவதனா,
உனது நன்றியை எதிர்பார்த்து அன்று உன்னை நான் காப்பாற்றவில்லை. உதவி வேண்டும் என்ற நிலையில் இருந்த பெண்ணாக நீ என் கண்ணில் பட்டாய். எனினும் என்னை விருந்திற்கு அழைத்தமைக்கு நன்றி. அலுவல் காரணமாக மதுரையில் மாட்டிக்கொண்ட என்னால், தற்காலிமாக உன் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை. விரைவில் வந்து உன்னை சந்திப்பேன் என்று நம்புகிறேன்.
இவ்வண்ணம்,
சொக்கநாதன்
இதனை எவ்வகையாக கொள்வது என்று அவளுக்கு தெரியவில்லை. இவர்தான் மதுரை சொக்கநாத நாயக்கர் என்று அவளுக்குத் தெரிந்தது. எனினும் அத்தூதுவனை விசாரித்து அவரை பற்றிய தகவல்களை அறியலாம் என்று எண்ணினாள்.
தூதன்
முதியவராய் தென்பட்டாலும் அவரைப் பார்க்கையில் ஒரு வாலிபனது கம்பீரம் தெரிந்தது.தோற்றத்தை நன்கு உற்றுப்பார்த்தால் எவராலும் எதையும் அறிய இயலாத பார்வை. ஆனால் பல நாட்களாக எங்கும் எதிலும் அறக்கட்டளைகள் காணும் சந்திரவதனாவிற்கா அவனை அடையாளம் தெரியாமல் போகும். எனினும் அவனை அவன் போக்கிலேயே சென்று பிடிக்க வேண்டும் என்று எண்ணினாள்.
' வாருங்கள் வெகு தூரம் பிரயாணம் செய்தவர் போல் காட்சி அளிக்கிறார்களே!!! களைப்பு தீர இரண்டு நாட்களாக நாட்களாவது ஓய்வு எடுத்து தான் செல்ல வேண்டும்!!' என்றாள்.
' அதற்காக என்னம்மா !!!!எனக்கு சிறு வயதிலிருந்தே இது பழகிய ஒன்று தான்!!! எனினும் தஞ்சை இளவரசி கூறும்போது மறுப்பது நன்றாக இருக்குமோ!!!!'
'இது உமக்கு தெரிகிறது!! உம்மை அனுப்பியவருக்கு தெரியவில்லையே!!! இல்லை பெண் பிள்ளையின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தால் நன்றாக இராது என்று விட்டுவிட்டாரா'
'இதென்னமா இப்படி ஒரு ஐயம் !!!இளவரசி!!!! மதுரை சொக்கநாதரை பற்றி தெரியாமல் பேசுகிறீர்கள் !!!அரசு அலுவல்களை வைத்துக் கொண்டு எவ்வாறு இங்கு அவரால் வர முடியும் !!!அது மட்டும் இல்லாமல் தனியாக எங்கும் செல்ல இயலாத சூழ்நிலையில் அவர் மாட்டிக் கொண்டுள்ளார்!!!'
'ஓ!!? அதனால் என்ன!! மாறுவேடத்திலா வரமுடியும்!!? வரும்போது வரட்டும்!!! நான் இங்குதான் சில காலம் இருப்பேன்!!! அதற்குள் அவரைப் பார்க்க முடியும் என்று எண்ணுகிறேன்!!!'
தூதுவன் முகத்தில் சிறு மலர்ச்சி மட்டும் தென்பட்டது. மதிய உணவுக்குப்பின் சிறிதுநேரம் உலவலாம் என்று தோட்டத்தில் சென்று கொண்டிருந்தனர்.அவள் தன்னைக் கண்டகொண்டாளோ என்று கூட சில கண நேரம் சொக்கநாதன் நினைத்தார். இருப்பினும் அவளே அதனை கூறட்டும் என்று விட்டு விட்டார். அவள் நன்றாக சித்திரம் வரைவாள் என்று சொக்கநாதர் அறிந்திருந்தார். அவளது மற்ற சித்திரங்களை காணத் தனியே சித்திர மண்டபத்திற்கு சென்றார்.
அவளது இளம் வயது ஓவியங்கள் பலவும் அங்கிருந்தன. அதனை ரசித்தபடி சென்றவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த பல ஓவியங்களில் அவரது உருவம் தெரிந்தது. அவரை ஆதியும் அந்தமுமாய் வைத்து நிறைய ஓவியங்கள் தென்பட்டன. அவள் வாய் திறவாமலேயே அவளது உள்ளம் அவருக்கு பிடிபட்டது. தான் யார் என்ற உண்மையை தெரியாமலேயே தன்னை அவள் விரும்பி இருப்பதை அவர் அறிந்தார்.
காதலர்கள்
அடுத்த நாள், காலை தூதுவன் கிளம்புவதற்கு தயாராக இருந்தார். அப்போது அவரை வழி அனுப்புவதாக வந்த இளவரசியிடம்,'இளவரசி!!! நான் விடைபெறுகிறேன் !!! தாங்கள் ஏதேனும் எங்கள் அரசருக்கு செய்தி சொல்ல விரும்பினால், நான் தங்களது தூதனாக செல்ல சித்தமாய் இருக்கிறேன்' என்றார்.
அவளது கண்கள் சிறிது கலங்கின.
' தங்களது அரசருக்காக நான் காத்திருப்பதாக தெரிவியுங்கள் !!அதுவே போதும் !!என் தந்தைக்கும் அவருக்கும் இருக்கும் பகைமை எனக்கு நன்றாக தெரிந்தும் அவர்பால் என் மனம் சென்று விட்டது. இனி யாரையும் என்னால பதியாக ஏற்க முடியாது என்று தெரிவியுங்கள்!!!' என்று கண் கலங்கினாள்.
அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் ,'சந்திரா!!!!' என்று சொக்கநாதர் விளித்தது மட்டும்தான் நம் காதுகளில் விழுகிறது. உள்ளதால் இணைந்த இரு உருவங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்தன.
'இப்போதே ஆணையிடு இளவரசி இங்கிருந்தே உன்னை தூக்கி சென்று என் ராணி ஆக்குகிறேன்' என்று உணர்ச்சி மேலோங்கக் கூறினார் சொக்கநாதர்.
'இல்லை அரசே!!!!! முறைப்படி என் தந்தை என்னை தங்களிடம் மணமுடித்து அனுப்புவதைத்தான் நான் விரும்புகிறேன். எனக்காக, என் விருப்பத்திற்காக தங்களது பகைமையை விட்டு என் தந்தையிடம் முறைப்படி பெண் கேட்டு வருவீர்களா !!!!'என்று ஆவலுடன் கேட்டாள் சந்திரவதனா.
'வெண்ணிலவே!!!! நீ எதற்கும் கலங்காமல் இரு!!! உன்னை நான் எப்பாடுபட்டாவது அடைவேன் 'என்று உறுதியளித்தார் சொக்கநாதர்.
போர்
பிரிய விடை பெற்று, நேரே மதுரை சென்றவர், முதல் வேலையாக தஞ்சை அரசருக்கு மடல் வரைந்தார்.
வீரம் பராக்கிரமம் பொருந்திய தஞ்சை மன்னருக்கு என் வந்தனம்,
என் தாத்தா காலத்திலிருந்தே தொடர்ந்த தஞ்சை - மதுரை பகைமையை அவர்கள் வழிவந்த நாம் உடைத்தெறியும் வாய்ப்பு கிடைத்தால், அதனை நழுவ விடலாமா!!! அதனை வாள் வழியே தீர்க்காமல் நாம் கேளீராகிக்கூட உடைத்தெரியலாமே!!அதுவே அடுத்து வரும் நமது சந்ததிகளுக்கு நாம் செய்யும் நன்மையாகும்.
தங்கள் மகள் சந்திரவதனாவை எனது பட்டத்து ராணியாக விழைகிறேன். தங்களது முடிவுக்காக காத்திருக்கிறேன்.
இவ்வண்ணம்,
சொக்கநாதன்.
சொக்கநாதரின் மடல் கிடைத்த அடுத்த நொடி, விஜயராகவ நாயக்கர் இரத்தம் துடித்தது. முதலில் ஆட்களை அனுப்பி பாதுகாப்பாக இளவரசியை தஞ்சை அழைத்து வந்தார்.
ஆணவம் அரசரையும் அழிக்கும் என்ற கூற்றினை நம்பாமல் தன் மறுப்பு மடலை அகம்பாவத்துடன் எழுதி அனுப்பினார்.
அதனை பார்த்த சொக்கநாதர் கோபத்துடன் வீரர்களைத் திரட்டி தஞ்சையை போருக்கு அழைத்தார்.
பெரும் போர் மூண்டது.ஏற்கனவே போர் விதிமுறைகளை அமைத்ததாலும், அரசரே முன்னின்று போரை வழிநடத்தியதாலும், மதுரையின் கையே ஓங்கியது.வேளாண் வளர்ச்சியிலேயே சில ஆண்டுகளாக கவனம் செலுத்திய தஞ்சை சிறிது பின்னடைந்தது.
தஞ்சை - தன் கோட்டை சுவர்களை இழப்பதற்கு முன்பாகவே, அதன் வீரர்கள் பலரை இழந்தது. தஞ்சையில் இனி தனக்கில்லை என்ற எண்ணம் விஜயராகவ நாயக்கர் மனதில் தோன்றியது. போருக்கு தானே செல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
உடனே அவர் தன் மனதை திடப்படுத்திக் கொண்டு அரண்மனைப் பெண்டிரை அழைத்தார். ராணிக்கள் மற்றும் இளவரசி ஆகியோரை ஒரே கமராவில் சேர்த்தார். எதற்காக என்று அவர்கள் யோசிப்பதற்குள்ளாகவே அவர்கள் தீயில் கருகினர்.
சந்திரவதனா கண்ணீருடன் தன்னைக் காக்க சொக்கநாதன் வருவார் என்று நம்பினாள். இது எதையுமே அறியா அவரோ தஞ்சையை கைப்பற்றும் வெறியோடு போரிட்டுக் கொண்டிருந்தார். விஜய ராகவர் போரில் வீர மரணம் அடைந்த பின்பே, சந்திரவதனாவின் இறப்பு சொக்கநாதருக்குத் தெரிந்தது. வெற்றி நாயகியைப் பெற்ற அவரால் தன் நெஞ்சை கொள்ளை கொண்ட நாயகியை அடைய முடியவில்லை..
காவியக் காதலர்களாக வலம் வர வேண்டியவர்கள் கல்வெட்டுகளில் மட்டும் இடம் பெற்றனர்..
பின் கதை: சொக்கநாதர் மங்கம்மாள் என்ற பெண்ணை மணந்தாலும் சந்திரவதனாவை மறக்க இயலாமல் தவித்தார். அந்த வலியால் சிறிது காலத்திலேயே இறைவனடி சேர்ந்தார் என்கிறது வரலாறு. மங்கம்மாள் வீர மங்கையாக திகழ்ந்து, மதுரையின் புகழ் மீட்டெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக