பயணங்கள்
சில பயணங்களுக்கு என்றும் முடிவே இல்லை.வாழ்க்கையே பயணமாய் விவரித்த கவிஞர்கள் பலர் உளர்.மன அழுத்தமோ சோர்வோ, பயணங்களுக்கு அதனைப் போக்கும் ஆற்றல் உண்டு. பயணங்கள் மேல் அப்படி ஒரு பற்று மித்ராவுக்கு முண்டு.
அவள் தகவல் தொழில் நுட்பப் பிரிவில் வேலை செய்ய ஆரம்பித்து சுமார் மூன்று வருடங்கள் ஆகியிருக்கும்.அவள் படித்த பள்ளியோ கல்லூரியோ கற்றுக் கொடுக்க இயலாத அனுபவ பாடங்களை பயணங்கள் வழங்கியுள்ளன. இம் மூன்று வருடங்களில் தான் எத்தனை பயணங்கள்.
முதலில், விடுதியில் அவளுடன் தங்கியிருந்த தோழிகளின் வற்புறுத்தலால் ஆரம்பித்து பின் அவளுக்கே பயணங்கள் மீது பற்று அதிகம் உண்டாயிற்று. இரண்டு மாதம் எங்கும் செல்லாமல் விடுதிக்கும் அலுவலகத்திற்கும் சென்று வந்தாலே அவளது மனம் அடுத்து மேற்கொள்ளப்போகும் பயணத்திற்கு திட்டமிட ஆரம்பித்துவிடும்.
முதலில் இதெல்லாம் தேவையில்லாத செலவு என்று நினைத்தவள், பின் ஒவ்வொரு மாதமும் அடுத்து வரும் பயணத்திற்கு தனியே சேமிக்கும் அளவிற்கு முன்னேறி விட்டாள்.மித்ரா விற்கு 25 வயதிருக்கும். பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் பெற்றோரின் சொல் பேச்சை கேட்டு நல்லபடியாக முடித்தாள்.நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பம் ஆதலால் அவளையும் அவளுக்கு இரண்டு வயதில் சிறிய தங்கையையும் ஒரே நேரத்தில் படிக்க வைக்க சிரமப்பட்டனர். தான் சீக்கிரம் வேலைக்கு சென்றால் தான், சிறிது பிரச்சினைகள் தீரும் என்ற நிலைமை ஏற்பட்டது.அதற்கேற்றாற் போல் அவளுக்கு கல்லூரியின் மூலமே வேலை கிடைத்ததும், இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே பெங்களூருவில் வேலையில் அமர்ந்தாள்.
அவளுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து சுற்றுலா சென்றபோது கூட, அது அவளுக்கு வீண் செலவாகத் தான் பட்டது.பின்வந்த நாட்களில் சுற்றுலாவும் பயணங்களும் உங்கள் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகின.சில மாதங்களுக்கு முன்பு அவளது தங்கை கல்லூரி படிப்பை முடித்து, சென்னையில் வேலைக்கு சென்றதும் அடுத்தகட்ட கடமையையாற்ற அவளது பெற்றோர் விரும்பினர். திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்க்க முடிவெடுத்தனர்.
அடுத்த வாரம் அவளுக்கு நிச்சயதார்த்தம்.அடுத்து அவளது வாழ்க்கை எதை நோக்கிப் பயணிக்கும் என்று அவளுக்குத் தெரியாது. அதனால் தற்போது தன் வாழ்வில் மறக்க இயலாத பயணத்தை உருவாக்க விரும்பினாள். அதற்காக அவள் மேற்கொண்டப் பயணம் தான் இது.
இரவின் மடியில், அதிர்ந்து ஒலிக்காத இசையும், அவளது நண்பர் பட்டாளமும் தான் அவளுடன் துணை நின்றன. விடிகாலைப் பொழுதில் தான் அவர்கள் கண்ணயர்ந்தனர்.கிரீச் என்ற சப்தத்துடன் அவர்கள் சென்ற வாகனம் நின்ற போதுதான் மித்ராவிற்கு தூக்கம் கலைந்தது. கண்ணைத் திறந்து பார்த்தபோது, ஏதோ மலை குகைக்குள் அவர்கள் சென்ற வாகனம் நிற்பது போல் தோன்றிற்று. மணி ஆறு கூட ஆகவில்லை. சில்லென்று காற்று வேறு.சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.ரம்மியமாய் இருந்தது அந்த சூழ்நிலை.
வண்டியை விட்டு கீழே இறங்கி அனைவரும் பார்த்தனர். ஒரு பக்கம் மலையாகவும் இன்னொரு பக்கம் காடாகவும் இருந்தது. அவர்களை அழைத்து வந்த சுற்றுலா மையத்தினர், அவர்கள் காட்டு பகுதிகளில் எவ்வாறு செல்ல வேண்டும், எங்கே தங்குவது என்ற கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தனர்.
மித்ராவும் அவளது நண்பர்களும் காலை மழையை ரசித்தவண்ணம் ,மலையின் ஓரத்தில் நடந்தனர். விவரிக்க இயலாத அழகுடன் பள்ளத்தாக்கு ஒன்று காணப்பட்டது.தூரத்தில் அங்கங்கு காணப்பட்ட மலைகளிலிருந்து அருவிகள் தென்பட்டன.அருவிகளை அதிகம் நேரில் பார்த்திராத மித்ராவிற்கு, இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
அதற்குமேல் அவர்கள் வந்த வண்டி செல்ல பாதை இல்லாததால், தங்களது பைகளை சுமந்து ஒவ்வொருவராய் காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தனர். அடர்ந்த காடு. சிலுசிலுவென மழை. ரம்மியமாய் இருந்தன.அங்கங்கே காட்டிற்குள் வீடுகளும் தோட்டங்களும் தென்பட்டன. சேற்றில் நடந்தாலும் அதுவும் நன்றாகவே இருந்தது.
ஆர்ப்பரிக்கும் ஓடையின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.வாகன இரைச்சல் பழகிப்போன காதுகளுக்கு இந்த சத்தம் இரைச்சலாகவே தோன்றியது. இக்காட்டு மக்கள் எவ்வாறு இந்த சீதோஷண நிலையில் இப்பேரிரைச்சலுடன் வாழ்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றியது.அவர்கள் அனைவரும் விடுதி போன்ற ஒன்றை எதிர்பார்த்து செல்ல, அங்கே சென்றதும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது ஒரு சிறிய வீடு மட்டுமே.
மித்ரா அங்கிருக்கும் மக்களை வியப்புடன் பார்த்தாள். தொழில்நுட்பத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் இருந்தனர். மலைக்கு மேல் உள்ள கிராமம் ஆதலால் அடிப்படை தேவைகளுக்கு கூட அவர்கள் வெகுதூரம் செல்ல வேண்டும். ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் அருகில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை உண்டு, அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். அரிசிக்கு பதிலாக மூங்கிலரிசி என்ற ஒன்றை அவர்களே விளைவித்து வந்தனர்.
அனைவரும் தயாராகி வந்ததும், ஓரமாய் டீக்கடையில் இருப்பது போல உண்பதற்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. மழை விட்டு சிறிது வெயில் வந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், பெங்களூரு போன்ற நகரங்களில் வாழும் மக்களுக்கு உணவு உண்ண வாய்ப்புக் கிடைக்கப் போவது இல்லை என்று நினைத்தபடி தங்களுக்கு கொடுக்கப்பட்ட மூங்கில் அரிசி உணவை உண்ண தயாராகினர். மித்ராவிற்கு அந்த உணவின் சுவை பிடிக்கவில்லை என்றாலும் அதனைப் பற்றி உடற்பயிற்சி அதிகம் செய்யும் தோழி விளக்கியதும் மறுக்க முடியாமல் உண்டாள் .
சிறிது நேர இடைவேளைக்கு பிறகு அவர்களை அருவிக்கு அழைத்துச் செல்ல,அவ்வீட்டின் முதியவர் தயாரானார்.பட்டாளமாய் காட்டிற்குள் சுற்ற அனைவரும் தயாராகினர். சிறிது தூரம் செல்ல செல்லதான் அக்காட்டுப்பாதை எவ்வளவு மோசமானது என்பது புரிந்தது. அதிகமான மனித நடமாட்டம் இல்லாத பகுதி ஆதலால் புதர்கள் தென்பட்டன. இளம் வயதினராய் இருப்பவர்களே திணறி நடக்கும் நிலையில், அம்முதியவர் மட்டும் ஓட்டம் எடுக்காத குறையாய் நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வப்போது ஆங்காங்கே சிலர் நின்று புகைப்படம் எடுப்பதும் பேச்சும் சிரிப்புமாய் பயணம் தொடர்ந்தது. முடிவே இல்லாப்பயணம் போல் சென்று கொண்டிருந்தது திடீரென நின்றது.
ஒரு வழுக்குப்பாறை மலையை அடுத்து கடக்க வேண்டும். அனைவரும் அங்கங்கே அங்கேயே தங்கள் செருப்புகளை கழற்றி விட்டு ஏறினர். நிறைய பாறை சறுக்கல்கள் ,பாசி வழுக்கல்கள் என கடினமாக இருந்தது அப்பாதை.உயரே சென்றதும் இதுவரை எங்கோ கேட்டுக்கொண்டிருந்த அருவியின் சத்தம் மிக அருகில் கேட்பதுபோல் இருந்தது. சில முட்புதருக்குள் செல்லும்போதுதான் எதற்காக நாம் இவ்வளவு ஆபத்தான செயலில் ஈடுபடுகிறோம் என்று மித்ராவிற்குத் தோன்றியது.இதற்கிடையில் மித்ராவின் தோழி மலையில் வழுக்கி விட சிறிது கலக்கத்துடன் பயணம் தொடர்ந்தது. சிறிதான காயத்துடன் அவளது தோழியும் புதருக்குள் ஏறி வந்தாள்.
அழகான அருவி.திதுபே என்பது அதன் பெயர்.ஆள் நடமாட்டம் இல்லாத அமைதியான அருவி. அருவி சிறு குன்றின் மேல் விழுந்து, பின் குளம்போல் உருவாகியிருந்தது. அடியில் கற்பாறைகள் தூய்மையான தண்ணீரில் அழகாய் காட்சியளித்தன.ஆர்ப்பரித்து வரும் தண்ணீரில் வேண்டிய மட்டும் குதித்து விளையாடிய நண்பர்கள் பட்டாளம் மதிய நேரத்திற்கு மேல் தான் வெளியே வந்தனர்(அதற்கு மேல் இருந்தால் அவ்வருவி அவர்களை விழுங்கியிருக்கலாம்) .
திரும்பிச் செல்லும் இப்பயணம் அவர்களுக்கு சொர்க்கமாக இருந்தது. பயணமே சொர்க்கமாய் இருக்கும்போது போகும் இடத்தைப் பற்றிய கவலை இருக்குமோ!!.ஆடி ஓய்ந்து,சிரித்து மகிழ்ந்து மறுபடியும் வீடு வந்து சேர நண்பகல் நேரம் ஆனது. ஆனால் எவர் முகத்திலும் சோர்வு இல்லை. மதிய உணவு உண்ணும் போது ஒரு கவளம் சோறு அதிகம் சென்றிருக்கும்.
மித்ராவிற்கு இவை அழகிய நாட்கள். தொலைபேசி பார்த்துத்தான் நேரத்தை செலவிட வேண்டும் என்று தோன்றாமல் மனம் போன போக்கில் அலைந்து திரிவது எவருக்கேனும் பிடிக்காமல் போகுமா!!
உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்பார்கள். ஆனால் இவர்கள் அனைவரையும் முந்திக்கொண்டு வழிகாட்ட அம்முதியவர் தயாராகி நிற்கும்போது, எவருக்கேனும் உறக்கம் வருமா..!! மீண்டும் ஒரு நெடிய பயணம்.இச்சமயம் அப்பயணம் வெகுதூரம் ஆதலால், அவர்கள் பெரியதொரு நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்தனர்.
வெகுதூரம் அமைதியாக மலையை ஒட்டி பயணம் செய்து ஒரு மலையடிவாரத்தில் சென்று நின்றனர். அங்கே எர்மை என்றொரு அழகிய நீர்வீழ்ச்சி உண்டாம். காலைப் பயணம் போல் இது ஒன்றும் கடினமானமாய் இருக்கவில்லை. தூரத்திலேயே அருவியின் கூக்குரல் காதுகளில் விழுந்தது. எனினும் அருகில் செல்லும் வரை யாரும் எதுவும் பேச வில்லை.
ஆகா!!! என்ன ஒரு அழகிய காட்சி. ஒரு பக்கம் மலையை செடிகள் போர்வை போல் போர்த்தியிருந்தது. எவரேனும் அவற்றிற்கு அழகாக பூக்கக் கற்றுத் தந்தனரோ!!! பார்ப்பவர்களுக்கு அவ்வண்ணம் தான் தோன்றும்.வரி வரியாய் அம்மலையில் பூக்கள் பூத்திருந்தன.
இரண்டு ஆள் உயரத்திற்கு படி அமைத்து விண்ணுலகம் சென்றால் எவ்வாறு இருக்கும். அது போல் இருந்தது அவ்வருவி கொட்டும் மலை. ஒவ்வொரு படியிலும் உள்ளே நிற்பதற்கு மண்டபம் போல் இடமிருந்தது. இயற்கையின் வர்ண ஜாலத்தை அறிவையும் எவரேனும் மிஞ்ச முடியுமா!!
அதைப்போன்ற மலையில் ஏற பின்புறம் சில புதிர்களை கடந்தால் வழி இருக்கும். மலையின் ஒரு படியை மட்டும் ஏறி அதில் விளையாண்ட இன்ப நிகழ்வை எவ்வழி விவரிப்பது!!!! வர மனமில்லாமல் (மறுபடியுமா!!!)அருவியை விட்டு வெளியே வந்தனர் .
பசி வயிற்றைக் கிள்ள, வந்தவர்கள் உடையை மாற்றிக்கொண்டு உணவு உண்டனர். எங்கே உறங்கப் போகிறோம் என்று பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. படங்களில் பார்ப்பது போல உறங்குவதற்கு கூடு போன்ற அமைப்பில் இருந்த பை (tent 😁😁) வழங்கப்பட்டது.சிறுவயதில் கட்டிலில் கொசு வலைக்கட்டி தங்கையுடன் கதை பேசிய நிகழ்வு மித்ராவுக்கு ஞாபகம் வந்தது. பயணம் ஆரம்பமாகி ஒருநாள் தான் முடிந்திருந்தது. அதற்குள் எத்தனை மறக்கமுடியாத தருணங்கள் என்று நினைத்தபடி உறங்கிப் போனாள்.
அடுத்த நாள் காலை எழுந்ததும், வீட்டின் அருகே இருந்த கிணற்றின் மேடையில் அமர்ந்து சுற்றுச்சூழலை ரசித்தபடி பல்துலக்கினாள். இன்பமான காலையாக அது இருந்தது. ஒண்டி குடுத்தன வீடுகளை பார்த்திருக்கிறீர்களா?!!! ஒன்றோ இரண்டோ கழிவறைகள் இருக்கும். குளிப்பதற்கு முறை போட்டு செல்ல வேண்டும். அதேபோல் இங்கும் சில குளியல் அறைகளே இருந்தன. ஒவ்வொருவரும் நான் நான் என்று போட்டி போட்டு குளிக்க செல்ல ,மித்ரா விற்கும் அவளது தோழிக்கும் அருகில் பேரிரைச்சலுடன் ஓடும் ஓடையை காண ஆர்வம் ஏற்பட்டது. குளிப்பதற்கு முன் நனைந்தாலும் பரவாயில்லை ,என்று நினைத்தபடி ஓடையை நோக்கி சென்றனர்.
எதற்காக இந்த அவசரம்??? என்று அதனை பார்த்து கேள்வி கேட்க வேண்டும் போல் தோன்றிற்று. சீறிப் பாய்ந்து ஓடும் நீர் சில பள்ளங்களில் விழும் இடத்தில் ஒரு மரம் பாலம் அமைத்திருந்தது. அந்த மரத்தில் அமர்ந்து ஓடும் நீரில் கால் வைப்பதில்தான் என்ன சுகம்!!சினிமாவில் வரும் காட்சி போல இருந்தது. இம்மக்களை காணும் போது, சிறிது பொறாமையாகத் தான் இருந்தது. இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை அல்லவா!!! அடிப்படை மருத்துவ வசதிகளுக்கு கூட பல மைல் தூரம் செல்ல வேண்டும். எனினும் அவர்களுக்கு அத்தேவை ஏற்படவில்லை. எந்தவித ரசாயனமும் கலக்காத உணவு மற்றும் சுத்தமான காற்று, நீர் அவர்களது உடலை மெருகேற்றி இருந்தது.
சிறிது நேரத்தில் அனைவரும் கிளம்பி, அடுத்த நாள் பயணத்திற்கு தயார் ஆகினர். பைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டியது தான். போகும் வழியில் சில சுற்றுலாத் தலங்களை பார்த்துவிட்டு பெங்களூரு செல்ல வேண்டும். ஒரே ஒரு நாளில் இந்த ஊர் ஏற்படுத்திய பாதிப்பு என்று மறுக்க இயலாது.
வாகனத்தில் ஏறி உட்கார்ந்து,அவ்வூரை ரசித்தபடி பேசிக் கொண்டும், கும்மாளமிட்டபடியும் நண்பர் கூட்டம் ஊரை விட்டுச் சென்றது.மதிய நேரத்தில் தான் பேலூர் என்று ஒரு ஊரை அடைந்தனர்.
ஹொய்சாலா மன்னர்கள் கட்டிய பழமையான கோயில் அங்குண்டு.கற்பாறைகளால் அமைந்த அக்கோயில் நுணுக்கமாக செதுக்கி வைக்கப்பட்டிருந்தது. எங்கும் எதிலும் அவர்களின் கைவண்ணம் தெரிந்தது.கோவிலில் வழிபாடு முடிந்து, ஊர் திரும்பும் வேளையில் தான் மித்ராவிற்கு தோன்றியது. இனிமேல் வாழ்வில் இது போன்ற பயணம் ஏற்படாமல் போகலாம். ஆனால் தான் மேற்கொள்ளப் போகும் பயணம் ஒவ்வொன்றும் தனக்கென்று ஏதோ ஒரு பாடத்தை கற்பித்துக் கொண்டே இருக்கும். இவ்வூர்களை தன் வாழ்நாளில் இனி காணாமல் போகலாம்.என்றென்றும் இவை நினைவுகளில் இருக்கும்.
அம்மா!!ஹலோ!! இரண்டு நாள் லீவ் சொல்லி இருக்கேன் மா!!!.ஞாயித்துகிழமை தானே!! நான் புதன்கிழமை அங்கு இருப்பேன்!!!என்று அடுத்த கட்ட பயணத்திற்கு தயாரானாள் மித்ரா.
கருத்துகள்
கருத்துரையிடுக