பலாமரம்

 மித்ரா செய்வது பைத்தியக்காரத்தனமாக தோன்றியது அம்மாவிற்கு.தன் பேச்சை யார் கேட்கப் போகிறார்கள் என்று திட்டிக்கொண்டே அன்றிரவு சமையல் செய்ய கிளம்பினார்.மித்ரா வீட்டிற்கு செல்ல பிள்ளை.வெகு காலமாய் மித்ராவின் பெற்றோருக்கு குழந்தை இல்லாமல் இருந்து பிறந்த பிள்ளை. அதனால் மித்ரா சொல்வதை மறுப்பதற்கு வீட்டில் யாரும் இல்லை.அப்படி அவள் விருப்பத்திற்கு மரியாதை கொடுத்ததற்கு அம்மா பலமுறை புலம்பியிருக்கிறார்.

மித்ரா படித்து பட்டம் பெற்று பெரிய நிறுவனத்தில் வேலையில் சேர்ந்ததும், மித்ராவின் பெற்றோர் பூரித்துப் போயினர்.ஆனால் ஆறு மாதமே அம்மகிழ்ச்சி நிலைத்தது. வேலை பிடிக்கவில்லை என்று எவர் பேச்சையும் கேட்காமல் அவள் வேலையை விட்டிருந்தாள்.

தனியாக தொழில் செய்யப் போவதாக அவள் கூறியதும், அம்மா அவளைத் திட்ட ஆரம்பித்தது இன்று வரை தொடர் கதை ஆகிவிட்டது.


மித்ரா

அம்மா அப்பாவிற்காக படித்து பட்டம் பெற்றது மட்டுமல்லாமல், அவர்கள் விருப்பப்படி வேலையிலும் சேர்ந்தாயிற்று. எனினும் என் வாழ்க்கை எவ்வகையிலும் எனக்கு ஆத்ம திருப்தி அளிக்கவில்லை.

 பெங்களூர் வந்த இரண்டாம் மாதமே எனக்கு ஒன்று புலனாயிற்று.எனக்கு பிடித்ததை செய்யா விட்டால் வாழ்வில் ஒரு வெறுமை புகுந்துவிடும் என்று தோன்றியது. எனக்கு இருந்த ஒரே பிரச்சினை, எனக்கு என்ன பிடிக்கும் என்பதை நானே உணராமல் இருந்தது.

அடுத்த ஒரு மாதம், எனக்கு என்ன பிடிக்கும் என்பதை நானே புலனாய்வு செய்ய ஆரம்பித்தேன். சிறு வயதிலிருந்தே ஆடல் பாடல் போன்ற கலைகளில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டதே இல்லை. ஆயகலைகளில் ஒரு கலையில் கூட எனக்கு ஆர்வம் இல்லாதது போல் தோன்றியது.

ஆனால் எனக்குள் ஒரு பிடிவாதம் முளைத்தது. எவ்வாறாவது எனக்கு பிடித்தமான ஒன்றை செய்தே ஆகவேண்டும். அருகிலிருந்த அடுக்குமாடி குடியிருப்புகளை பார்த்ததும் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

அவற்றில் ஏன் நாம் பசுமையை உண்டாக்க கூடாது. அதற்காக கிடைக்கும் பணம் போதும்   என்று தோன்றியது. நான் இப்போது பார்க்கும் வேலையில் கிடைக்கும் சம்பளம் அதில் கிடைக்காமல் போகலாம். என் தொழில் ஏறுமுகத்தில் செல்ல நிறைய காலம் பிடிக்கலாம். என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை முட்டாள் என்று கூடக் கூறலாம். ஆனால் நான் விடாமல் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும் என்று தோன்றியது. எல்லாவற்றிற்கும் மேல் எனக்கு பிடித்தமான ஒன்றை செய்த திருப்தி கிடைக்கும்.

சிறுவயதிலிருந்தே எனக்கு தெரிந்த ஒரே கலை, மரம் நடுதல் மட்டுமே. பாட்டி கூட அவ்வப்போது சொல்வதுண்டு. நான் சாதரணமாக விதையைத் தூக்கி எறிந்தால் கூட,அவை செழித்து வளரும் என்று.

நான் பாட்டி வீட்டில் வளர்ந்த போது அங்கு ஒரு பெரிய தோட்டம் இருந்தது. அதில் பலவிதமான பூச்செடிகள் இருந்தன. பெரிய மரங்கள் எதுவும் இல்லை. எங்கள் பக்கத்து வீட்டில் பலவிதமான மரங்கள் உண்டு. மாங்காய் காய்க்கும் காலத்தில் மாவடுக்களுக்குக் கூட அருகில் உள்ள வீடுகளில் தான் கேட்க வேண்டும். நம் வீட்டில் இதுபோல் மாங்காய் கனிந்து, அதை எப்போது உண்போமோ என்று எண்ணிய காலங்கள் உண்டு.

 ஒரு மாலை நேரம்,

 தாத்தா வெளியில் சென்று வரும்போது ,பலாச்சுளைகள் வாங்கி வந்திருந்தார். வழக்கம் போல சுளைகளை சாப்பிட்டுவிட்டு, கொட்டைகளை சுட்டுத் தின்ன அவற்றை சட்டைப்பையில் பதுக்கினேன். அதை பார்த்த தாத்தா, 'அந்த கொட்டையை பொன்னாக்கிறதும்,மண்ணாக்கிறதும்  உன் கையில்தான் இருக்கு 'என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் விளக்கி கூறியதும் தான் புரிந்தது. அந்த கொட்டையை மண்ணில் நட்டால் அதைப் பொன்னாக்குவதற்கு  சமம் .அதை அப்படியே உண்டால், அதை மண்ணாக்குவதற்கு  சமம்‌ என்று.

அதன்படி அந்த கொட்டையை வேலியின் ஓரத்தில் நட்டு, அதற்கு ஓர் அடையாளத்தையும் வைத்தேன். அது சிறிய செடியாக உரு மாறவே ஒரு ஜென்மம் ஆனதுபோல் எனக்கு தோன்றியது.அவ்வப்போது சிறு கிளைகள் வளர்ந்தாலும், ஆடு மாடு மேய்ந்து விடும். எனக்குத் தெரிந்து நான் அந்த கொட்டையை நட்டு நான்கு வருடத்திற்கு பின் தான் முதல் கனி உருவானது. தாத்தாவை நான் எப்போது தேடினாலும் கிடைக்கும் இடமாக அம்மரம் மாறியது.

நாங்களே நட்டு வளர்த்ததாலோ என்னவோ, அம்மரம் எப்போதுமே எங்களுக்கு பிடித்த மரம். முதலில் காய்த்த பழம் சிறிது சுவையில் பின்தங்கினாலும், அடுத்த சில வருடங்களில் எங்களது கொல்லையில் காய்த்தால், அதன்  சுவையே தனி என்றானது.

அதன்பிறகு தான் எனக்கு தோட்டக்கலையில் ஆர்வம் உண்டானது. சென்னையில் நாங்கள் குடியேறியது, ஒரு ஒண்டிக் குடுத்தன வீட்டில்.அதில் மரமோ அல்லது செடியோ நடுவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. அம்மாவிற்கு அது என்றும் பிடித்ததுமில்லை.

தாத்தாவோடு ஊரின் தொடர்பும் போனது.!!!வீடும் போனது!! அம்மரமும் போனது!!நானும் பெங்களூருவில் தோட்டக் கலைத் தொழில் (நர்சரி) ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. சொல்லிக்கொள்ளும்படி எனது தொழிலில் முன்னேறவில்லை என்றாலும், என்னால் யாரும் நஷ்டப்படவில்லை. சில அரிய வகை மூலிகைகளுக்கு கிராக்கி அதிகமாக இருந்தது. அவைகளையும் வளர்க்கலானேன்.

அவை துளிர்விட்ட போதெல்லாம் தாத்தாவும் நாங்கள் வளர்த்த பலா மரமும் தான் கண் முன் தோன்றின. நாளடைவில் அம்மரம் தற்போது எப்படி இருக்கும் என்ற கற்பனை மனதில் ஓடியது. தாத்தா இறந்த சில மாதங்களில், வீடு வேறொருவர் கைக்கு மாறியது. ஆசாரி வேலை செய்பவர்தான், எங்கள் வீட்டை வாங்கி இருப்பதாக அம்மா கூறினார். அதனால் அம்மரம் தற்போது அங்கே இருக்காது என்பது அவரது எண்ணம்.

அதையும் தான் நேரில் சென்று பார்ப்போமே!!! என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. நாளை இரவு ரயிலில் மயிலாடுதுறை சென்று, அங்கிருந்து பின் கிராமத்திற்கு செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன் பார்த்தது. பாவாடை சட்டையுடன் அங்கிருந்து வந்து, சேலையில் மறுபடியும் சென்றால் நம்மை யாராவது அடையாளம் கண்டு கொள்வார்களா!! என்ற எண்ணம் ஓடியது. என் அப்பாவிற்கு இதில் ஆர்வம் இருப்பது போல் தோன்றியது.

மரத்தைப் பற்றிய ஆர்வம் இல்லை என்றாலும், பிறந்த மண்ணை பார்க்கப்போகும் ஆர்வம் அவரிடம் தெரிந்தது. ஒரு மாத காலமாய்  அம்மாவின் திட்டுக்களை மீறி பயணத்தை ஏற்பாடு செய்தோம் நாங்கள் இருவரும். இதோ பயணம் நாளும் வந்துவிட்டது. தூக்கமும் பறந்தோடி விட்டது.

அப்பா

மித்ரா கேட்டு இதுவரை எதையும் நான் மறுத்ததில்லை.அவள் தனியே தொழில் செய்ய கிளம்பியதும், தடுக்க நினைத்தும் என்னால் முடியவில்லை. சில நாட்களில் அதில் இருக்கும் கஷ்டங்களை உணர்ந்து மீண்டும் பழையபடி வேலைக்கு செல்ல ஆரம்பித்து விடுவாள் என்று எண்ணினேன். நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது போலும். பிரச்சினைகள் பல வந்தாலும் நினைத்த காரியத்தை திறம்பட செய்யலானாள். நஷ்டங்கள் பல அடைந்தாலும் விடாமுயற்சியுடன் அடுத்த முயற்சிகளில் ஈடுபடலானாள்.

இந்த மரம் செடி வளர்ப்பது எல்லாம் அப்பாவிற்கு தான் பிடித்தமான ஒன்று. அதனால்தானோ என்னவோ அந்த தோட்டத்தை பார்த்தபோதெல்லாம், அப்பா அங்கு நடமாடுவது போலவே தோன்றும். அவ்வீட்டை விற்று பத்து வருடங்கள் இருக்கும்.

திடீரென்று மித்ரா மறுபடியும் கிராமத்துக்குப் போக அழைத்ததும் எனக்கும் ஆசை பிறந்தது. அப்பா விதைத்த விதைதான், அவளிடம் துளிர்விட்டு வளர்ந்ததோ என்று நினைக்கவும் தோன்றியது.

சென்று தான் பார்ப்போமே!! எனக்கும் அந்த ஊர் தானே பூர்வீகம்!! ராமசாமி ,கலியமூர்த்தி எல்லாரையும் பாக்கணும். இதற்கு கமலம் சம்மதிக்க மாட்டாள்  என்று எனக்கு தெரியும். இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் மித்ராவுக்கு கல்யாணம் செஞ்சா கூட அவர்களது உறவு நமக்கு வேண்டுமே!!!


மித்ரா

புதன்கிழமை இரவு 8 மணி. ரயில் 10 நிமிட தாமத்திற்கு பின், ரயில் நிலையத்தை வந்தடைந்தது.முன்பதிவு செய்திருந்த பெட்டியைக் கண்டு, இருக்கையை கண்டுபிடித்து அமர்ந்தோம்.அப்பாவிற்கு கீழ இருக்கை. நான் அதே வரிசையில் மேலிருக்கும் இருக்கையைத் தேர்வு செய்திருந்தேன். அம்மாவால் இப்போதெல்லாம் அதிகம் பிரயாணம் செய்ய முடிவதில்லை அதனால் அவர் மட்டும் வீட்டில் தங்கும்படி ஆயிற்று.

காலை திருச்சி சென்று, அங்கிருந்து மயிலாடுதுறைக்கு தொடர் வண்டி பிடிக்க வேண்டும். வெகு நாட்களுக்கு பிறகு ,தொலைதூர பயணம் மேற்கொள்வது நன்றாக இருந்தது. அப்பாவிற்கு தான் முடியவில்லை போலும் !!! அவர் கண்களில் அலைச்சல் தெரிந்தது. அங்கு சென்ற உடனே கிராமத்திற்கு செல்ல முடியாது. நன்றாக ஓய்வு எடுத்து விட்டு, அடுத்த நாள் காலையில் தான் செல்ல வேண்டும்.

அடுத்த நாள் மதியம்,

உறவினர் வீட்டில் மதியம் உணவு உண்டு, அப்பா உறங்கச் சென்றுவிட்டார். ரயிலில் பாதி நேரத்தை உறக்கத்தில் கழித்ததால் பகலில் எனக்கு தூக்கம் வரவில்லை. அவர்களது வீட்டில் பெரிய தோட்டம் இருந்தது. அதை சுற்றிப் பார்க்க கிளம்பி விட்டேன் நான்.

கிராமங்களில் இருப்பது போல பெரிய தோட்டம் இல்லை என்றாலும், இருந்த சிறு இடத்தை அழகான பூச்செடிகளால் அலங்கரித்திருந்தனர். செம்பருத்தியில் மூன்று வகை, ரோஜாக்களில் இரண்டு வகை மற்றும் சில சிறிய மரங்களும் தழைத்து ஓங்கி இருந்தன.வீட்டிற்கு மரங்கள் எவ்வளவு அழகு சேர்க்கிறது என்பது நன்றாக புரிந்தது

அடுத்த நாள் காலை 8 மணி.

குளித்துக் கிளம்பி உணவருந்தி ஊருக்கு செல்ல கிளம்பிவிட்டோம். எங்கள் உறவினரும் எங்களுடன் கிளம்பி, தன் நான்கு சக்கர வாகனத்தை தயார் நிலையில் வைத்திருந்தார். போகும் வழியில் என் அப்பாவின் நண்பர்கள் சிலரை சந்தித்து விட்டு, ஊர் போய் சேர்ந்தோம். எங்கள் தெருவில் நுழையும் போதே கால்கள் பரபரத்தன.

இதோ வீட்டின் முன் காரை நிறுத்தி, இறங்கி விட்டோம். எங்கள் வீடா இது!!! என்று நினைக்கும் வகையில் உருமாறி இருந்தது அது.

பழமை கருதியோ என்னவோ வீட்டை யாரும் இடித்து உருமாற்றவில்லை.வீட்டின் வெளியில் இருந்த கிணற்றிற்கு அருகில் ஒரு அழகிய தோட்டம் உருவாகியிருந்தது. தாத்தா இருந்தவரை, அங்கு ஒரு தென்னங்கன்றைத் தவிர வேறு எதையும் நான் கண்டதில்லை. ஆனால் இன்றோ, அதனை சுற்றி பல வகையான க்ரோட்டான்கள் ,செம்பருத்தி செடிகள் என இருந்தன. மல்லிகைக் கொடி ஒன்று கீற்றுக் கொட்டகையில் படர்ந்திருந்தது வீட்டிற்கு இன்னும் அழகு சேர்த்தது.

அவ்வீட்டில் இருந்தவவர்கள் இன்முகத்துடன் எங்களை வரவேற்று ,உள்ளே அழைத்து சென்றனர். பத்து வருடத்திற்கு முன் நான் பார்த்த அதே வீடு. பொருட்களில் வித்தியாசம் இருந்ததே தவிர, வீட்டின் உருவமைப்பு மாறவில்லை.

சிறிது நேர உரையாடலுக்குப் பின் வீட்டின் முதலாளி எங்களை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். பலாமரத்தை என் கண்கள் தேடின.

அதோ!!!!!!!!!!!!!!!!!! செழிப்புடன் பல மடங்காகப் பெருகி, தழைத்து வளர்ந்து இருந்தது அது. அதன் அருகில் பல புதிய மரங்களும் செடிகளும் முளைத்திருந்தன. பலா மரத்தின், நிழலில் அழகிய வேலைப்பாடுகளுடன் சில இருக்கைகள் இருந்தன அவற்றில் அமர்ந்து எங்களுக்காக காத்திருந்த நுங்குகளை உண்டபோது, அமிர்தமாக இருந்தது.

கொல்லையின் மூளையில் பல பனை மரங்கள் இருந்தன. அவை தான் இந்த நுங்குகளைத் தந்தன என்று உணர்ந்தபோது, சிலிர்த்தது எனக்கு. இதற்காகத்தானே பல நாட்கள் சிறுவயதில் ஆசைப்பட்டோம் என்று நினைத்துப் பார்த்தேன். நம் தோட்டத்தில் விளைந்த கணிகளை உண்ண வேண்டும் என்று எத்தனையோ முறை கனவு கண்டுள்ளேன்.

இவ் வீடும், தோட்டமும் உரியவர் கைகளில்தான் சேர்ந்திருக்கிறது என்று தோன்றியது. தாத்தா இருந்து, என் நிலைமையில் இருந்து பார்த்தால், இப்படித்தான் உணர்ந்திருப்பார்.

தோட்டம் அமைக்க மட்டுமல்ல, எந்த காரியத்தை ஏற்றாலும் ஆசைப்பட்டால் மட்டும் போதாது. விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நினைத்ததை முடிக்கலாம் என்று தோன்றியது. கிளம்பும் நேரத்தில் வீட்டின் அம்மா,'வந்தவங்க எதுவுமே சாப்பிடாமல் போறீங்க.இந்தாங்க !!இந்த பலாச்சுளைகளையாவது சாப்பிடுங்க' என்று கொண்டு வந்து வைத்தார்.

அன்றும் இன்றும் என்றும், பலாச்சுளைகள் ருசியில் தோற்கவில்லை. பலாமரம் கர்வமாக ஓங்கியிருந்தது. என்னை கண்டு கொண்டது போல சாமரம் வீசியது.

பலாக் கொட்டைகளை எடுத்து என் பையில் பதுக்கினேன். இம்முறையும் அது பொன்னாவதும் மண்ணாவதும்  என் கையில் தான் உள்ளது.


- லெட் சுமி பாலசுப்பிரமணியன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Book review - perfectly imperfect

Book review 10- when the clock strikes thirteen