அம்மு
பாட்டி வீட்டை நோக்கி செல்லும் போதே, எப்போது அம்முவைப் பார்க்கப் போகலாம், எப்போது விளையாடப் போகலாம் என்று மனம் சிந்திக்க ஆரம்பித்து விடும். ஆறு மாத காலமாய் நடந்தவைகளை அலசி ஆராய்ந்து, புதிதாய் பல கதைகள் பேசி, பொழுது ஓடிவிடும். பாட்டி வந்து அழைத்து செல்லும் வரை விளையாட்டு மட்டுமே நினைவில் நிற்கும். இது ஒவ்வொரு முறையும் மித்ரா அவள் பாட்டி வீட்டிற்கு செல்லும் பொழுது நடப்பதுதான் . மித்ரா அவளது பாட்டி வீட்டில்தான் சிறுவயதிலிருந்தே வளர்ந்து வந்தாள். பக்கத்து வீட்டு குடிசையில் வாழும் அம்மு அவளது இணைபிரியாத சினேகிதி. மித்ராவின் தந்தை அவளை, பட்டணத்தில் இருக்கும் ஆங்கிலப் பள்ளியில் சேர்த்ததால் அவள் அங்கேயே தாய் தந்தையருடன் குடிபெயர வேண்டிய நிலை. எனினும் ஒவ்வொரு விடுமுறையிலும் அவள் பாட்டி வீட்டிற்கு வந்து விடுவாள். நாட்கள் போவதே தெரியாமல் அம்முவுடன் விளையாடி பொழுது போய்விடும். அம்முவும் மித்ராவைப்போல பாட்டி வீட்டில்தான் இருந்தாள் என்றாலும், மித்ராவின் குடும்பத்தைப் போல அவளது குடும்பம் பொருளாதாரத்தில் மேம்படவில்லை. அம்முவிற்கு ஒரு அண்ணனும் இரண்டு தங்கையும் உண்டு. அம்முவின் பாட்டிக்கு துணையாக வீட்டில...