அம்மு
பாட்டி வீட்டை நோக்கி செல்லும் போதே, எப்போது அம்முவைப் பார்க்கப் போகலாம், எப்போது விளையாடப் போகலாம் என்று மனம் சிந்திக்க ஆரம்பித்து விடும். ஆறு மாத காலமாய் நடந்தவைகளை அலசி ஆராய்ந்து, புதிதாய் பல கதைகள் பேசி, பொழுது ஓடிவிடும். பாட்டி வந்து அழைத்து செல்லும் வரை விளையாட்டு மட்டுமே நினைவில் நிற்கும்.
இது ஒவ்வொரு முறையும் மித்ரா அவள் பாட்டி வீட்டிற்கு செல்லும் பொழுது நடப்பதுதான் . மித்ரா அவளது பாட்டி வீட்டில்தான் சிறுவயதிலிருந்தே வளர்ந்து வந்தாள். பக்கத்து வீட்டு குடிசையில் வாழும் அம்மு அவளது இணைபிரியாத சினேகிதி. மித்ராவின் தந்தை அவளை, பட்டணத்தில் இருக்கும் ஆங்கிலப் பள்ளியில் சேர்த்ததால் அவள் அங்கேயே தாய் தந்தையருடன் குடிபெயர வேண்டிய நிலை. எனினும் ஒவ்வொரு விடுமுறையிலும் அவள் பாட்டி வீட்டிற்கு வந்து விடுவாள்.
நாட்கள் போவதே தெரியாமல் அம்முவுடன் விளையாடி பொழுது போய்விடும். அம்முவும் மித்ராவைப்போல பாட்டி வீட்டில்தான் இருந்தாள் என்றாலும், மித்ராவின் குடும்பத்தைப் போல அவளது குடும்பம் பொருளாதாரத்தில் மேம்படவில்லை. அம்முவிற்கு ஒரு அண்ணனும் இரண்டு தங்கையும் உண்டு. அம்முவின் பாட்டிக்கு துணையாக வீட்டில் எல்லா வேலைகளும் செய்யவே அவள் அங்கு இருந்தாள்.
இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சனி ஞாயிறுகளில், தனது வீட்டிற்கு சென்று வருவாள். அதுவும் எந்த விழாவோ விருந்தினரோ வரவில்லை என்றால் மட்டும் தான். அரசினர் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அம்மு, மித்ராவை விட ஒரு வயது தான் மூத்தவள்.ஆனாலும் மித்ராவை விட பல மடங்கு வேலைகள் செய்வதில் கெட்டிக்காரி.
காலையில் எழுந்ததும், வீடு துடைத்து, கோலமிட்டு, பாத்திரம் துலக்கி, எல்லா மேல் வேலைகளையும் அவ்வயதிலேயே திறம்பட முடித்துவிடுவாள். சமையல் செய்வது மட்டும்தான் அவளது பாட்டியின் வேலை.
மித்ராவிற்கு இது எதுவும் தெரியாது. சிறுவயதிலிருந்தே அவளைக் கவனிக்க ஓர் வேலையாள் உண்டு. அவளை நன்றாக பராமரித்து ,அலங்கரித்து நேர்த்தியாக வைத்திருப்பர். வீடடில் போடக்கூட அழகிய ஆடைகள் 👗 என செல்லமாக வளர்க்கப்பட்டாள்.
எப்போதும் வேலை செய்து, அழுக்குப் படிந்த உடையுடன் (அதுவும் இரண்டு மட்டுமே) இருக்கும் அம்முவிற்கு மித்ராவை பார்க்கும் போது பொறாமையாக இருக்கும்.
மித்ராவின் வீட்டில் தொலைக்காட்சி கூட உண்டு.( அப்போதெல்லாம் கிராமங்களில் எவராவது ஒருவர் வீட்டில் தான் தொலைக்காட்சி இருக்கும்). ஆனால் மித்ராவின் தாத்தா அதிக நேரம் அவர்களை தொலைக்காட்சி பார்க்க அனுமதித்ததே இல்லை.
இவ்வாறு தன்னையும் யாராவது பார்த்துக் கொள்ள மாட்டார்களா !!! என்று ஏங்குவாள்.எனினும் கள்ளமில்லாமல் தன்னுடன் பழகும் மித்ராவை அவள் எவ்வாறு அவமதிப்பாள். உற்ற தோழிகளாக கடைசி வரை இருக்க வேண்டும் என்று அவர்கள் உறுதி எடுத்திருந்தனர்.
பட்டணத்துக்கு படிக்கச் சென்று ஒரு ஆறு வருடம் ஆகியிருக்கும். இப்போதும் மித்ரா பாட்டி வீட்டிற்கு வந்ததும் செல்வது அம்முவைப் பார்க்கத்தான். அப்படித் தான் பள்ளி இறுதித் தேர்வை முடித்துவிட்டு அங்கு வந்திருந்தாள்.
அம்முவின் வீடு மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. எப்போதும் மித்ரா வந்திருக்கிறாள் என்றால் வாசல் வரை ஓடி வந்து வரவேற்கும் அம்மு, இம்முறை ஒரு தடவை வந்து எட்டிப் பார்க்கக்கூட இல்லை.மித்ராவால் அதிக நேரம் பாட்டி வீட்டில் இருக்க முடியவில்லை. அம்முவின் வீட்டிற்கு ஓடினாள். அம்முவின் வீட்டில் ,அம்முவின் பாட்டி சாய்வான நாற்காலியில் அமர்ந்திருக்க, அவள் மட்டும் வீட்டை கழுவிக் கொண்டிருந்தாள்.
அவளது ஊரில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் அடுத்த நாள் திருவிழாவாம். அதற்காக அவள் செல்வதற்கு முன்னால் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்து முடிக்கவே அந்த பரபரப்பு .மித்ரா ,தான் வந்த முதல் நாளே அம்மு அவள் வீட்டிற்கு செல்வதை விரும்பவில்லை. ஆனால் அம்முவோ தன் வீட்டிற்கு செல்லும் மும்முரத்தில் ஓடிக்கொண்டு இருந்தாள்.
மித்ரா இதற்கு முன் தீமிதிக்கும் திருவிழாக்களை பார்த்ததில்லை. அவளது வீட்டில் யாரும் அவளை அழைத்து சென்றதும் இல்லை. அவளை உற்று நோக்கிய அம்மு 'நீயும் என்கூட வரியா மித்ரா !!! எங்க ஊர் இங்கே இருந்து கொஞ்ச தூரம் தான். போய் நாளைக்கு திருவிழா பார்த்துட்டு, கடைசிப் பேருந்தைப் பிடித்துக்கூட இங்கே வந்துடலாம். எங்க வீடு ரொம்ப அழகா இருக்கும். ' என்றாள்.
மித்ரா விற்கும் செல்ல ஆசைதான்.பாட்டியிடம் எப்படி அனுமதி பெறுவது என்று தான் யோசனையாக இருந்தது. அம்முவையும் அழைத்து சென்று அனுமதி பெற வேண்டி,' எனக்கும் ஆசையாத்தான்டி இருக்கு. பாட்டி கிட்ட நீயும் வந்து சித்த சொல்கிறாயா 'என்று வேண்டினாள்.
பாட்டியிடம் பலமுறை எடுத்துச் சொல்லியதும் அடுத்த நாள் காலை அம்மு வீட்டிற்கு சென்று அன்று இரவே திரும்பிவரும் யோசனைக்கு ஒப்புக்கொண்டார் . இப்படிதான் மித்ரா தன் வாழ்வில் மறக்க இயலாத ஒரு பயணம் மேற்கொண்டாள்.
அம்முவின் கிராமம் ஒரு மணி நேரப் பயணத்தில் தான் இருந்தது. பேருந்தை விட்டு இறங்கியவுடன் மித்ராவிற்கு இவ்விடத்தில் வீடுகள் இருக்கின்றனவா என்று சந்தேகமே வந்தது .ஏனெனில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை, வயல்வெளியும் ஆங்காங்கே தென்னந்தோப்புகளும் தான் கண்ணில் தென்பட்டது.
அம்முவிற்கு ஊருக்கு வந்த மகிழ்ச்சி. சந்தோஷமாக அருகில் இருந்த வயல் வரப்பில் நடந்து சென்றாள். வயல் வரப்புகளில் நடந்து பழகாத மித்ராவிற்கு தான் அப்பயணம் கடினமாக இருந்தது. சிறிது தூரம் நடந்ததும் ஒரு தென்னந்தோப்பிற்குள் சென்றனர்.
பத்து அல்லது பதினைந்து தென்னை மரங்கள் தான் அதற்குள் இருந்திருக்கும்.ஆனால் அவை தந்த நிழலோ அருமையாக இருந்தது. தோப்பின் நடுவில் ஒரு மாமரமும் இருந்தது. ஆட்கள் வேலை செய்தபடி இருந்ததால் ஏதோ பரபரப்பாக காணப்பட்டது. அம்மு ஓடி சென்று அங்கு மரத்தடியில் அமர்ந்திருந்த பெரியவரை கட்டிக்கொண்டாள்.
அவர் தான் அங்கு வேலை செய்பவர்களை மேற்பார்வையிடும் அதிகாரியாம்(!!!!). ஒரு காலத்தில் இதே தோப்பில் வேலை செய்து வந்தவர், வயது மூப்பு காரணமாக மரம் ஏறுவதை நிறுத்தி விட, அவரது முதலாளி இரக்கப்பட்டு அவருக்கு இவ்வேலையை போட்டுக் கொடுத்தாராம்.
அவரது வெளிப்படையான பேச்சு மித்ராவை ரசிக்க வைத்தது. மித்ராவிற்கு அங்கேயே இளநீர் வெட்டிக் கொடுத்தவர், இருவரையும் பத்திரமாக வீடு போய்ச் சேர சொல்லி அனுப்பினார். அங்கிருந்து புறப்பட்ட போதும் மறுபடியும் சுற்றி வயல்வெளிகள் மட்டுமே மித்ராவிற்கு தெரிந்தது.
செருப்பைக் கழற்றி கையில் தூக்கிக் கொண்டு வயல் வரப்பில் நடப்பது அலாதியான சுகம்தான். ஐந்து நிமிடம் வயல் வரப்பில் நடந்ததும், காடு ஒன்று தென்பட்டது. அதற்குள் இறங்கி நடந்ததும் அம்முவின் ஊர் வந்தது.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் பத்து வீடுகள் இருக்கலாம். பேருந்துகளில் செல்லும்போது வயல்வெளிக்கு நடுவில் இது போன்ற குடிசை வீடுகளை பார்த்திருக்கிறாள் மித்ரா. ஆனால் இன்றுதான் முதன் முறையாக அவற்றுக்குள் செல்கிறாள்.
வீட்டைச் சுற்றி சில மரங்கள் இருந்தன. அவை வீட்டிற்கு, நல்ல நிழலை தந்தன.வீடு ஆறு பேருக்கு சிறிதாக இருந்தாலும் ,சுத்தமாக மெழுகப்பட்டிருந்தது. அவள் வீட்டினுள் சென்றதும், அனைவருக்கும் மகிழ்ச்சி. அம்முவின் தங்கைகள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அவளை வரவேற்க, அம்மாவிற்கோ மித்ராவிற்கு என்ன சாப்பிடக் கொடுப்பது என்றே தெரியவில்லை.
அம்முவின் அண்ணனை அனுப்பி, சர்பத் வாங்கி வரச் சொன்னார். அம்முவின் தங்கை, தன்னிடமிருந்த புது ஆடையைக் கொடுத்து ,'இப்போதைக்கு இந்த ஆடையை போட்டுக்கோங்க அக்கா!!! சாயந்திரம் கோயிலுக்கு போகும்போது நீங்க போட்டிருக்கிற ஆடையை மாற்றிக் கொள்ளலாம்.' என்றாள்.
அவர்களது அன்பு ,மித்ராவை வியக்க வைத்தது. சர்பத் அருந்தி விட்டு , வீட்டிற்கு வெளியில் விளையாடினர். நிறைய நாள் கழித்து கூட்டமாய் விளையாடுவது நன்றாகத்தான் இருந்தது. ஏன் அம்மு எப்பொழுதும் வீட்டிற்கு வர ஆசைப்படுகிறாள் என்பது புரிந்தது.
ஆசை தீர விளையாடிய பின்னர் , வீட்டின் பின்புறத்தில் இருந்த பம்புசெட்டில் கை கால்களை கழுவினர்.அப்போதுதான் வீட்டின் பின்பக்க வாசலை மித்ரா நன்றாகப் பார்த்தாள்.
மரத்தால் ஆன கதவில் கம்பியை வைத்து சுரண்டியது போல் கோடுகள் தென்பட்டன. அம்மு அதற்கு,' இங்கு நிறைய நரிகள் வரும்.ராத்திரி இங்க கொஞ்சம் பயந்தான். அப்படித்தான் ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிட்டு இருந்துச்சு. அதோட நகத்தடம் தான் இது.'என்று ஏதோ கதை சொல்வது போல, நரி வந்த கதையை சொல்லிக் கொண்டிருந்தாள்.
மதிய உணவிற்கு அம்முவின் அம்மா நிறைய நிறைய வகைகள் செய்திருந்தார். அனைத்தும் மித்ரா விற்காக பார்த்துப் பார்த்து பக்குவமாய் செய்திருந்தார். அனைவரும் பம்புசெட்டின் அருகிலேயே அமர்ந்து நீரில் கால் நினைத்தபடி உண்டனர். மித்ராவிற்கு மட்டும் புது தட்டு வந்திருந்தது. மற்றவர்களுக்கு அம்மாவே பிசைந்து ,உருண்டை பிடித்து கையில் கொடுத்தார்.
அதைப் பார்த்த பின்னர் மித்ராவால் தனியே உணவு உண்ண முடியவில்லை. அவள் தயங்கி தயங்கி அம்மாவிடம் கையை நீட்டினாள்.புன்சிரிப்புடன் அம்மா மித்ராவின் கையில் ஒரு உருண்டையை திணித்தார். இது ஒரு புது அனுபவமாக மித்ராவுக்கு தோன்றிற்று. குடும்பமாக சேர்ந்து சாப்பிடுவதே பெரிய விந்தையாய் போன காலத்தில் அவர்கள் இவ்வாறு சாப்பிடுவது ஆச்சரியமாகவே இருந்தது.
உணவு உண்டபின் களைப்பு நீங்கக் குட்டித்தூக்கம் போட்டனர். மதியம் தூங்கிப் பழக்கம் இல்லாத மித்ராவிற்கு கூட அவர்கள் வீட்டில் நன்றாகத் தூக்கம் வந்தது.
மாலை 4 மணிக்கு அனைவரையும் எழுப்பி கிளப்பிக்கொண்டு திருவிழா நோக்கி சென்றார் அம்மா.ஜனத்திரள் ஒன்று அங்கே இருந்தது. கெட்டியாக மித்ராவின் கையைப் பற்றியவர், அனைவரையும் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொள்ளவேண்டும் என்று கூறிவிட்டு முன்னே நடந்தார்.
தேரோட்டம் ஆரம்பமாகியிருந்தது. அவர்கள் போன நேரம் அம்மன், வீதியில் வலம் வந்து கொண்டிருந்தாள். மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளிக் கொண்டு சென்றனர். அம்முவின் கடைசி தங்கை, அம்மாவிடம் போக அழுததால், அவளை ஒரு கையிலும் மற்றொரு கையில் மித்ராவையும் பிடித்துக் கொண்டு அம்மா அங்கே சென்றார்.
கோவிலின் முன் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் மித்ரா, அம்முவின் கையை விட்டுவிட்டாள். கோவிலின் உட்பிரகாரத்தில் கூட்டம் சிறிது குறைவாக இருந்தது.அங்கே சென்றப்பின் தான், அம்முவும் மற்றவர்களும் அவர்களுடன் இல்லை என்பது தெரிந்தது.
தொலைந்தால், வீட்டிற்கு வர தெரியாத அளவு சிறு பிள்ளைகள் இல்லை என்றாலும், கூட்டத்தில் என்ன நேருமோ என்ற பயம் அம்மாவின் முகத்தில் தென்பட்டது. சின்ன பாப்பாவையும் மித்ராவையும் கோவிலில் கூட்டம் அதிகம் இல்லாத இடத்தில் அமர செய்து , மற்றவர்களைத் தேடிப் புறப்பட்டார்.
அவர் சென்று கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகியிருக்கும். மித்ராவிற்கு பயமாக இருந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே அம்மா அவர்களை அழைத்து வந்துவிட்டார். அம்மாவின் அப்பா ,திருவிழாவில் வந்து சேர்ந்து கொள்வதாக கூறி இருந்தார். அவரும் இப்போது அவர்களுடன் இருந்தார்.
சந்தோஷமாக தீமிதி திருவிழாவை காண கோவிலின் வெளியே வந்தனர்.அலகு குத்துவதையும் தீ மிதிப்பதையும் படங்களில் மட்டுமே பார்த்துள்ள மித்ராவிற்கு முதன் முறை அவற்றை நேரில் பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது.அலகு குத்திய வண்ணம், மக்கள் நெருப்புக் கங்குகள் கால் வைத்து ஓடிக் கொண்டிருந்தனர்.அங்கே ஒரு பக்கம் பொய்க்கால் குதிரையாட்டம் நடந்துகொண்டிருந்தது. இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மித்ராவிற்கு நேரம் போனதே தெரியவில்லை.
இன்னும் ஒரு மணி நேரத்தில் அவள் வீட்டில் இருந்தாக வேண்டும். இல்லையெனில் அவளது தாத்தாவும் பாட்டியும் பயப்படக் கூடும். அடுத்த முறை அவள் வெளியே செல்வதை அவர்கள் தடுக்க கூடும். ஆனால் திருவிழாவில் மூழ்கி இருந்தவர்களுக்கு இது எதுவுமே ஞாபகம் வரவில்லை.
மணியைப் பார்த்த அம்மாவிற்கு மட்டும் பதட்டமானது.' அடடா !!! மித்ராவை வீட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டுமே!!!இதற்கு மேல் சாப்பிட கொடுத்து, பெண்களை எவ்வாறு தனியே பேருந்தில் அனுப்புவது ' என்று ஒரு நிமிடம் யோசித்தார்.
அவசரமாக அனைவரும் அங்கிருந்த இட்லி அம்மா கடைக்கு சென்றனர்.அங்கும் கூட்டம் அலைமோதியது. அம்முவின் அப்பா எப்படியோ கூட்டத்திற்குள் புகுந்து சென்று, அம்முவிற்கும் மித்ராவிற்கும் இட்லி வாங்கி வந்துவிட்டார்.அவர்கள் சாப்பிட்டுவிட்டு செல்வதற்கும் பேருந்து கிளம்புவதற்கும் சரியாக இருந்தது.
ஒரு நிமிட தாமதத்தால் பேருந்தை விட்டு விட்டனர். அடுத்த நாள், காலைப் பேருந்தில் தானே உடன் வந்து மித்ராவின் பாட்டியிடம் சமாதானம் அளித்து அவளை விட்டு விட்டு வருவதாக அம்முவின் அப்பா கூறிப் பார்த்தார். மித்ராவை விட அம்முவிற்கு அழுகை அதிகமாக வந்தது. இனிமேல் மித்ராவை தன்னுடன் பழகுவதற்கு அனுமதிக்காமல் போனால் என்னாவது என்ற எண்ணம் அவளுக்கு மேலோங்கியது.
ஒரு நிமிடம் யோசித்த அப்பா, அருகில் இருந்த சைக்கிள் கடைக்கு சென்று, வாடகைக்கு சைக்கிள் வாங்கி வந்துவிட்டார். அம்மு மற்றும் மித்ரா இருவரும் சேர்ந்து சைக்கிளின் பின்னால் அமர்வது சாத்தியமில்லை. எனவே அம்மு முன் கம்பியிலும் மித்ரா பின் சீட்டிலும் அமர்ந்து பயணம் செய்தனர்.
அங்காங்கே திருவிழா கூட்டம் அதிகமாக இருந்தது. எனினும் அப்பா மெதுவாக கூட்ட நெரிசலில் சைக்கிளை விட்டார். பொது வழியில் அதிக கூட்டம் வருவதும் போவதுமாய் இருக்க, சிறிது நேரத்தில் அருகில் இருக்கும் ஊருக்கு வந்த அவர், அங்கு ஓடும் வாய்க்காலை நோக்கி கை காட்டினார்.
மித்ராவிற்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் ,அம்மு மட்டும் சந்தோஷமாக துள்ளிக் குதித்தாள். அருகில் இருக்கும் வீட்டிற்கு சென்று , கதவைத்தட்டி ஏதோ பேசிய அவர் , சைக்கிளை அவர்களது தோட்டத்தில் நிறுத்தி பூட்டினார். மித்ரா மற்றும் அம்முவை அழைத்துக் கொண்டு, அவ்வீட்டின் பின்பக்கம் நோக்கி சென்றார். அங்கு சென்று அருகில் இருந்த படகை அவிழ்த்த போதுதான் மித்ராவிற்கு நடப்பது புரிந்தது.இப்படித்தான் ஆரம்பமானது மித்ராவின் முதல் படகு சவாரி.
சிறிது தூரம்தான் என்றாலும், வாழ்வில் இனி இது கிடைக்காது என்று அவள் நினைத்தாள்.(அவர்கள் சவாரி செய்தது காவிரி ஆற்றின் மேல். அடுத்த சில வருடங்களில், அவ்வாற்றில் தண்ணீரே இல்லை என்பது வேறு கதை.)
20 நிமிட பயணத்தில், அவர்கள் ஒரு இடத்தில் இறங்கினர். சுற்றிலும் வயல் வெளியாக இருந்தது. இருட்டிலும் மித்ராவின் கண்களுக்கு அது அழகாகத் தெரிந்தது .அங்கேயே படகைக் கட்டி வைத்து விட்டு சுமார் ஐந்து நிமிட நடைப்பயணத்தில் வீட்டை அடைந்தனர். அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்த மித்ராவின் தாத்தாவும் பாட்டியும் அவர்களை கண்டதும் நிம்மதியடைந்தனர்.
இந்த நிகழ்வுக்குப் பின் மித்ராவின் மனநிலையே வேறு என்று கூட சொல்லலாம். இவ்வளவு அழகான குடும்பத்தில் இயற்கை சூழலில் வாழும் அம்முவைப் பார்த்தால் வீட்டின் ஒரே பெண்ணான மித்ராவிற்கு பொறாமையாக இருப்பது வியத்தகு விஷயம் அன்று.படித்துப் பட்டம் பெற்று வாழ்வில் வெவ்வேறு திசையில் பயணித்தாலும், அம்முவை மட்டும் இன்றுவரை பொறாமையாக தான் பார்க்கிறாள் மித்ரா.
கருத்துகள்
கருத்துரையிடுக